சகா விமர்சனம்

0

127 total views, 1 views today

சிறு வயதில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறார் சிறைச்சாலைக்கு வரும் சின்ன வயது குற்றவாளிகளைப் பற்றிய கதை சகா.
அம்மா அப்பா இல்லாமல் அனாதைகளாக வளர்ந்து, நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் சரண் மற்றும் பாண்டி.
தங்களுக்கு அம்மாபோல் இருந்து ஆதரவு காட்டியவரை கொன்றவனை பழிக்கு பழியாக கொல செய்துவிட்டு அந்தக் குற்றத்துக்கான தண்டனையை அனுபவிக்க இருவரும் சிறார் சிறைக்கு வருகிறார்கள்.
சிறை வாழ்க்கையோ வெளியுலகைக் காட்டிலும் இன்னும் கொடுமையாக இருக்கிறது.

பெண்களைக் கடத்தி விற்ற குற்றத்துக்காக சிறைக்கு வரும் பிருத்வியுடன் நண்பர்கள் இருவருக்கும் ஏற்படும் மோதல், கடுமையான பகையாக மாறுகிறது. இதனைத் தொடர்ந்து பாண்டியின் கதையை சிறையில் வைத்தே முடித்துவிடுகிற பிரித்வி, சிறையிலிருந்து விடுதலை பெற்றும் விடுகிறார்.
அப்புறமென்ன… சரண் தான் உயிருக்கு உயிராக காதலித்த தன் காதலி சகாவை சாகடித்த பிரித்வியை பழி வாங்கத் துடிக்கிறார். அந்த பழிவாங்கும் படலத்தை சுவராஸ்யம் குறையாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் முருகேஷ்.
கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த பாண்டியராஜன் மிஷ்கின் இயக்கத்தில் வந்த படமொன்றில் வில்லன் வேடம் ஏற்றதைப்போல், அவர் மகன் பிருத்வியும் கதாநாயகனாக அறிமுகமானாலும் ஒரு இடைவெளிக்குப் பிறகு வில்லன் அவதாரம் தரித்திருக்கிறார். கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து சரியாக செய்திருக்கிறார் பிருத்வி. வில்லன் என்றாலும் சும்மா சொல்லக் கூடாது… கவரச்சி வில்லன்.

ஆய்ரா, நீரஜா என்று இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி ஒருவருக்கும் வேலையில்லை.

படத்தின் கதை இளம் குற்றவாளிகளையே கதையின் பிரதான கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறது. கதையின் பெரும்பாலான காட்சிகளும் சிறார் சிறைச்சாலையிலேயே நடக்கிறது. சிறார் சிறை என்பது குற்றம் செய்துவிட்டு வருபவர்களைத் திருத்தி வெளியே அனுப்புவதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த படத்தில் சிறைக்குள்ளிருக்கும் இளம் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் தவறு செய்வதாகவே காட்டியிருக்கிறது திரைக்கதை.

அந்த சிறையின் வார்டனாக வருகிற தீனா கதைப்படி, தன் அப்பாவை கொன்று விட்டு 10 வயதில் சிறைக்கு வந்து பிறகு வார்டனாக உயர்ந்தவர். அந்த வார்டன் படம் முழுக்க அத்துமீறி அடாவடித்தனங்கள் செய்துகொண்டேடடட இருக்கிறார். இளம் குற்றவாளிகளைத் திருத்துவதற்குப் பதில் அவர்களை மீண்டும் மீண்டும் தவறு செய்யத் தூண்டுகிறார். என் கவுண்டர் போலீஸ் ரேஞ்சுக்கு துப்பாக்கியோடு துரத்தி ஒரு இளம் குற்றவாளியைக் கொல்கிறார். சாரி இந்தக் காட்சிகள் எல்லாம் நம்பும்படி இல்லை. தப்பிச் சென்ற சிறார் குற்றவாளிகளை தேடிக்கண்டுபிடிக்க கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகளைத் துரத்துவதுபோல் வார்டன் துரத்துவது சாரி கொஞ்சம் ஓவர் ரகம்தான்.

அதேபோல் முன் பகுதியில் சிறார் சிறைச்சாலைக்குள் நடக்கும் காட்சிகள் அலுப்பைத் தரும் வகையில் அமைந்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.

கிளைமாக்ஸுக்கு முன் வருகிற டிவிஸ்ட் எதிர்பாராததாக இருக்கிறது.

படத்தில் இடம் பெறும் பாடல்களை எழுதியிருப்பதுடன் இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் ஷபீர். முணுமுணுக்க வைக்கும் அளவுக்கு பாடல்களில் கவனம் செலுத்தியவர் பின்னணி இசையிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறுவயதில் செய்கிற குற்றச் செயல்கள் அந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதையும் நட்பின் ஆழத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் முருகேஷ்.

Share.

Comments are closed.