எம்பிரான் – விமர்சனம்

0

484 total views, 2 views today

நாயகியை துரத்தித் துரத்தி காதலிக்கும் நாயகனைத்தான் பெரும்பாலான படங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாயகனை துரத்தித் துரத்தி காதிலிக்கும் அழகான நாயகியை எம்பிரான் படத்தில் பார்க்கலாம்.

டாக்டராகப் பணியாற்றும் நாயகன் ரெஜித் மேனனை, நாயகி ராதிகா ப்ரீத்தி விரும்புகிறார். ஆனால் அவரிடம் தன் காதலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார். பின் தொடர்ந்து செல்கிறார்… படம் எடுக்கிறார் ஆனாலும் தன் மனதில் இருப்பதை சொல்ல அவருக்கு சந்தர்பம் கிடைப்பதில்லை.
டாக்டரை தனியாக சந்திக்க, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள செய்யும் முயற்சிகளும் தோல்வியில் முடிகிறது.
கடைசியில் குளிர்பானங்களை பாட்டில் பாட்டிலாகக் குடித்தும், ஐஸ்கிரீமை அள்ளி அள்ளி சாப்பிட்டும் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டு டாக்டரைப் பார்க்கப் போனால் அன்று ரெஜித் மேனன் வரவில்லை. அவருக்கு பதில் பெண் டாக்டர் ஒருவர் இருக்கிறார்.
ரெடிமேட் சட்டை ஒன்றை கிஃப்ட் பேக் செய்து டாக்டரின் காரில் வைக்கிறார். ஆனால் அதையும் டாக்டர் பார்க்கவில்லை.
இப்படியே போகிறது முதல் பாதி கதை.
காய்ச்சல் வந்த காரணத்தையும், டாக்டர்மீது தான் கொண்ட காதலையும் தன் தாத்தாவிடம் தெரிவிக்கிறார் ராதிகா ப்ரீத்தி. உடனே டாக்டரிடம் தன் பேத்தியை அழைத்துச் செல்லும்போது இருவரும் விபத்தில் சிக்குகின்றனர். தாத்தா மரணமடைய பேத்தி சுயநினைவை இழக்கிறார்.
ராதிகா ப்ரீத்தி குணமடைந்தாரா… ரெஜித் மேனன் அவரது காதலை புரிந்து கொண்டாரா என்பதுதான் மீதிக் கதை.
பெரிய திருப்பங்கள் இல்லாத ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு அதை படமாக்கத் துணிந்ததற்காகவே இயக்குநர் கிருஷ்ணபாண்டிக்கு ஒரு சபாஷ் போடலாம். மிகச் சாதாரண கதையை அருமையான திரைக்கதை மூலம் அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
டாக்டரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தன்னை காயப்படுதிக்கொள்ள நாயகி முயற்சிக்கும் காட்சிகள் தோல்வியில் முடிவது, ரசிக்கத் தக்கவகையில் அமைந்திருக்கின்றன.
டாக்டரிடம் தன் காதலை வெளிப்படுத்த முடியாத தவிப்பை, மிகவும் அழகாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் ராதிகா ப்ரீத்தி. தமிழ்ப் படவுலகுக்கு அழகும் நடிப்புத் திறமையும் ஒரு சேரப்பெற்றதொரு புதுமுகம் கிடைத்திருக்கிறார்.
ராதிகா ப்ரீத்தியின் தாத்தாவாக மெளலியும், ரெஜித் மேனனின் தாயாராக கல்யாணி நடராஜனும் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
கபிலன் வைரமுத்துவின் பாடல்களுக்கு பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்.
படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவு. இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் எதுவும் படத்தில் இல்லை என்றாலும், அலுப்பு தட்டாமல் முழு படத்தையும் அமர்ந்து பார்க்கும்படி செய்திருப்பது படத்தின் ஒளிப்பதிவுதான்.
கோவிலில் பூஜை செய்பவராக இருக்கும் தாத்தாவும் பேத்தி அவ்வளவு பெரிய வீட்டில் இருப்பார்களா என்ன என்ற கேள்வி படம் பார்க்கும்போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
குத்துப்பாட்டு, எரிச்சலூட்டும் நகைச்சுவை என்றெல்லாம் எதுவுமில்லாம்ல எளிய காதல் கதையை அழகாகச் சொல்லி இருக்கும் காரணத்துக்காகவே எம்பிரான் படத்தைப் பார்க்கலாம்.

Share.

Comments are closed.