ஜூலை காற்றில் – விமர்சனம்

0

290 total views, 2 views today

தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ஆனந்த் நாக், பள்ளியொன்றில் மனோதத்துவ ஆசிரியையாகப் பணியாற்றும் அஞ்சு குரியனுடன் நட்பாகப் பழகுகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வர, இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடக்கிறது.ஆனந்த் நாக் அஞ்சு குரியனுடன் அதிக நேரம் செலவிட ஆசைப்பட்டாலும், அவரது பணியின் சுமை காரணமாக அது முடியாமல் போகிறது.

இதற்கிடையில் அஞ்சுமீது தான் கொண்டிப்பது காதல் அல்ல, வெறும் ஈர்ப்புதான் என்று கருதும் ஆனந்த் இதை வெளிப்படையாக அவரிடம் தெரிவித்துவிட்டு பிரேக் அப் செய்து விடுகிறார்.
அடுத்ததாக சுதந்திரமான புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் சம்யுக்தாவுடன் ஆனந்துக்கு பழக்கம் ஏற்படுகிறது. படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருங்கிப் பழகுகின்றனர். சம்யுக்தா மற்ற ஆண்களுடன் பழகும் விதம் பிடிக்காததால் அவருடன் ஆனந்துக்கு உரசல் ஏற்படுகிறது. ஆனந்த் தன்னிடம் பொஸஸிவ் ஆக இருப்பது சம்யுக்தாவுக்கு பிடிக்கவில்லை. இப்போது சம்யுக்தா ஆனந்தை பிரேக் அப் செய்து விடுகிறார்.
முதலில் பழகிய அஞ்சுவுக்கு ஆனந்த் செய்தது இப்போது சம்யுக்தா மூலம் அவருக்கே திரும்பிவந்து விட்டது.
மன நிம்மதிக்காக கோவா செல்கிறார் ஆனந்த். அங்கே சர்ஃப்பிங் சொல்லித்தரும் பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்படுகிறது. தனது எண்ணத்தை அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்த, எனக்கு ஆண் நண்பர் இருக்கிறார். எனது எல்லை என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். அதை நான் மீற மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார் அந்தப் பெண்.

இதனால் ஏமாற்றமடையும் ஆனந்த், சம்யுக்தா இலங்கையில் இருப்பதாகத் தெரிந்து கொண்டு அவரைப் பார்க்க அங்கே செல்கிறார். ஆனால் சம்யுக்தா நாம் இருவரும் நண்பர்களாக வேண்டுமானால் இருக்கலாம். காதலர்களாக இருக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
சம்யுக்தா இப்படிச் சொல்லிவிடவே சம்யுக்தாவின் தோழியுடன் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார் நாயகன் ஆனந்த் நாக்.

இந்தப் படத்துக்கு இரண்டாம் பாகம் மூன்றாம் என்று எத்தனை பாகத்துக்கு வேண்டுமானல் கதை எழுதி விடலாம். மலருக்கு மலர் தாவும் வண்டுபோல் கதாநாயகன் ஒவ்வொரு பெண்ணிடமும் நெருங்கிப் பழகுவதுபோல் காட்சிகளை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போனால் சுலபத்தில் கதை தயாராகிவிடும்.

ஆனந்த் நாக் , அஞ்சு குரியன் சம்யுக்தா மேனன் ஆகியோர் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர். சேவியர் எட்வர்டின் அற்புதமான ஒளிப்பதிவு விழலுக்கு இறைத்த நீர் ஆகியிருக்கிறது.
படத்துக்கு என்ன செலவானாலும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் சொல்லியிருப்பார் போலிருக்கறது. அருமையாக ஆடக்கூடிய ஒரு பாலே நடனப்பெண்மணியை பெல்ஜியத்துக்கு அழைத்துச் சென்று ஒரு அற்புதமான நடனக்காட்சியை படமாக்கிவந்து படத்தில் திணித்திருக்கிறார் இயக்குநர் கே.சி.சுந்தரம். படத்துக்கும் கதையோட்டத்துக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாமல் துறுத்திக்கொண்டிருக்கிறது அந்தப் பாடல்.
ஜோஸ்வா ஸ்ரீதரின் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.

காதல் என்பது சரீரத்தின் தாளமாக இருக்கக் கூடாது. அது ஆன்மாவின் ராகமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாமல் இன்றைய இளை(ணை)ய தலைமுறை லிவிங் டுகெதர் கலாசாரத்தில் மூழ்கத் தொடங்கியிருக்கும் கால கட்டத்தில் ஜூலை காற்றில் போன்ற படங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.

ஒரு படைப்பு அதன் கலைத் தன்மையிலும் தொழில் நுட்பங்களிலும் எவ்வளவுதான் மேம்பட்டதாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான செய்தியை சொல்லும்போது அது கடுமையாக விமர்சிக்கப்படவேண்டியதே!

Share.

Comments are closed.