தி லயன் கிங் – விமர்சனம்

0

183 total views, 2 views today

முஃபாசா என்ற சிங்கம் ஒட்டுமொத்த காட்டு விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, காட்டுராஜா என்ற பெயருக்கேற்ப செம்மையாக ஆட்சி செய்கிறது. முஃபாசாவின் தம்பியான ஸ்காருக்கு எப்படியாவது தான் காட்டு ராஜா ஆகிவிட வேண்டும் என்று ஆசை. இதற்காக முஃபாசாவை வஞ்சகமாக கொலை செய்வதுடன், சூழ்ச்சி செய்து முஃபாசாவின் மகனான சிம்ஹாவையும்  காட்டைவிட்டே துரத்தி விடுகிறது.நீண்ட தூர பயணத்துக்குப்பின் வேறொரு காட்டுக்குச் சென்று வளரும் சிம்ஹா, பெரியவனான பின் தன் நண்பர்களுடன் வந்து சித்தப்பா ஸ்காரைக் கொன்று தந்தையின் கொலைக்கு பழி தீர்ப்பதுடன் மீண்டும் தந்தையைப்போலவே நல்லாட்சி செய்ய ஆரம்பிக்கிறது. இதுதான் லயன் கிங் படத்தின் கதை.
தான் சிறுவனாக இருந்தபோது தன் தந்தையைக் கொன்றவர்களை, பெரியவனான பிறகு கதாநாயகன் பழி வாங்கும் கதையை ஆயிரத்து சொச்சம் படங்களில் பார்த்திருப்போம். ஆயினும் ஒரு இடத்தில்கூட போரடிக்காமல், ரசித்துப் பார்க்கும்படி விறுவிறுப்பான திரைக்கதையில் தி லயன் கிங் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு வந்த கார்டூன் லயன் கிங் படமே வெகு சிறப்பாக இருக்கும். அதை இன்னும் மெருகேற்றி மிக அற்புதமாக உருவாக்கிய வால்ட் டிஸ்னி குழுமத்துக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவே நடத்தலாம்.
பழைய கார்டூன் பதிப்பின் துவக்கத்தில் வரும் பாடலை அப்படியே இவ்வளவு வருடங்கள் கழித்து இந்தப் படத்திலும் பயன்படுத்தியிருப்பதிலிருந்தே அந்தப் பாடல் காலத்தில் அழியாத பாடல் என்பதைப் புலப்படுத்துகிறது.
கார்டூன் லயன் கிங் வெளியானபோது வந்த ஒரு அஜித் படத்தில் இந்தப் பாடலை அப்படியே காப்பியடித்திருந்ததுகூட ‘தேனிசைத் தென்றல்’போல் இருந்தது.
பிரதான பாத்திரங்களுக்கு அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. சிம்ஹாவின் நண்பர்களாக வரும் விலங்குகளுக்கு ரோபோ சங்கரும் சிங்கம் புலியும் குரல் கொடுத்திருப்பது ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது.
சிங்கத்தின் பிடரி காற்றில் அசைவதுகூட அவ்வளவு தத்ரூபமாக நிஜ சிங்கத்தை நம் கண்முன் நிறுத்துகிறது, படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில் நுட்பம்.
படத்தின் வசனஙகள் மிகச் சிறப்பு. உதாரணமாக, “இந்தக் காடு யாருக்கும் சொந்தமில்லை. இதை நீ பத்திரமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்” என்று மூஃபாசா சிம்ஹாவிடம் கூறுவதைக் குறிப்படலாம்.
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மற்றும் இந்தக் காலத்துக்கேற்ற வசனங்கள் இன்னும் பல படத்தில் உண்டு.
சிறுவர் படங்கள் என்ற பெயரில் வரும் படங்களைப் பார்க்க பெரியவர்களுக்குப் பொறுமை இருக்காது. பெரியவர்களுக்கான படங்களுக்கோ தப்பித் தவறிகூட சிறியவர்களை அழைத்துப் போய்விட முடியாது. ஆனால் தி லயன் கிங் படம் சிறுவர்களை அழைத்துக்கொண்டுபோய் பெரியவர்கள் பார்க்க வேண்டிய படம்.

Share.

Comments are closed.