‘அண்ணாதுரை’ படத்தை பற்றி பாடலாசிரியர் அருண் பாரதி

0

Loading

விஜய் ஆண்டனியின் படங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். கதை சொல்லவும் ,அதனை மேலும்  வேகமாக  நகர்த்த  பாடல்களை உபயோகப்படுத்துபவர் அவர். அவரது அடுத்த ரிலீசான ‘அண்ணாதுரை’ படத்தின் ‘தங்கமா வைரமா’ பாடலின் டியூனும் , மனதில் எளிதாக ஒட்டிக்கொள்ளும் பாடல் வரிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. இது  கதாநாயகனின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வரிகளை கொண்டுள்ள பாடலாகும். படத்தின் சாராம்சத்தையும், கதாநாயகனின் கதாபாத்திரத்தையும் தெளிவாக வெளிப்படுத்தும் பாடலாக இது அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை கேட்டாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடலாசிரியர்  அருண் பாரதி இப்பாடலிற்காக   பெரும் பாராட்டுக்களை  பெற்று வருகிறார். ‘அண்ணாதுரை’ வரும் நவம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்பட இயக்குனர் ஸ்ரீனிவாசனும், கதாநாயகன் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் பாடலாசிரியர் அருண் பாரதியை பற்றி ஆரம்பத்திலிருந்தே பெரிதளவு  பாராட்டி வந்தனர். அவரது மொழி புலமை, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அறிவை அறிந்தவர்கள் அவரை பற்றி சிறப்பான விஷயங்களை கூறுகின்றனர் .
‘அண்ணாதுரை’ படத்தை பற்றி பாடலாசிரியர் அருண் பாரதி பேசுகையில் , ”விஜய் ஆண்டனி சாருக்கு  எனது வாழ்நாள் முழுவதும் நன்றிகள்  சொல்ல கடமை பட்டுள்ளேன். என் மீதும் எனது திறமை மீதும் பெரிய நம்பிக்கை வைத்து எனக்கு ‘அண்ணாதுரை’ படத்தின் நான்கு பாடலையும் தந்தார். இப்படத்திற்காக நாங்கள் முதலில் பதிவு செய்தது ‘தங்கமா வைரமா’ பாடல் தான். கதாநாயகனின் குணாதிசயங்கள் மற்றும் அவரின் கதாபாத்திரத்தை பற்றி விவரிக்கும் பாடல் இது. இப்படத்தின் நான்கு பாடல்களுமே, டியூனாகவும் வரிகளாகவும்  அருமையாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி சாருடன் பணிபுரிய கிடைத்த இந்த வாய்ப்பை நான் முழுமையாக பயன்படுத்தியுள்ளேன் என நம்புகிறேன். ‘அண்ணாதுரை’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன் ”.
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா ஆகியோர் நடித்துள்ளனர்.  ‘அண்ணாதுரை’ படத்தை ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்போரேஷின்’ நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ‘R ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. நடிகர்கள் ராதா ரவி , காளி  வெங்கட் , நளினிகாந்த் , ஜிவெல் மேரி மற்றும் ரிந்து ரவி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில்ராஜின் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனியின் இசை மற்றும் படத்தொகுப்பில், ஆனந்த் மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை இயக்கத்தில் , கல்யாணின் நடன இயக்கத்தில் , கவிதா மற்றும் சரங்கனின் ஆடை வடிவமைப்பில் , அருண் பாரதியின் பாடல் வரிகளில் ‘அண்ணாதுரை’ உருவாகியுள்ளது.
Share.

Comments are closed.