எனக்குள் இருக்கும் இனிமையின் சாரத்தை அலங்கரித்தாய் நீ, விடியலை வைத்து என்னுடைய இரவுகளை வரைந்தாய், பொய்கள் மறைகிறது, உண்மை விடிகிறது. ஒரு கவிஞனின் வேலையில் பாடல் வரிகளில் உருவகத்தை கலக்கும்போது தான் அதன் ஆன்மாவே வெளிப்படுகிறது. குறிப்பாக காதல் பாடல்களில்.
இந்த மாதிரியான விஷயங்களுக்கு பாடலாசிரியர் கார்க்கி ஒரு சிறந்த உதாரணம். புதுமையான வார்த்தைகளுக்கான அவரின் தேடலும், அவர் எழுதும் வரிகளும் ரசிகர்களுக்கு உடனடியாக பிடித்து போய் விடுகின்றன. இந்த தன்மைகளால் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் வரும் இதயனே பாடல் ஒரே இரவில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.
காதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். பாடல் வரிகள் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயம் ரசிகர்களை உடனடியாக கவரும் விதமாகவும் இருக்க வேண்டும். இரு ஆன்மாக்கள் உண்மையான காதலின் தேடலில் இருக்கும்போது இணைந்து, வழிந்தோடும் அழகான கவிதை பிறப்பதை பற்றி பேசுகிறது இதயனே பாடல். இருள், பொய்கள் மற்றும் எதிர்மறையான விஷயங்களை நேர்மறையான ஒளி அழிப்பதை பாடல் வரிகள் வலியுறுத்த வேண்டும். அனிருத் எப்போதுமே பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் லேசான வாத்தியமும், சிறப்பான இசையும் பாடலை வேறு தளத்துக்கு நகர்த்தி சென்று விடும்.
சிவகார்த்திகேயன், அனிருத் இணை, இசை ரசிகர்களுக்கு சிறந்த காதல் பாடல்களை அயராது பரிசளித்திருக்கிறார்கள். இதுவும் என்னுடைய பொறுப்பை உணர்த்தி, அவர்களின் வெற்றியை தக்க வைக்க கடுமையான உழைப்பை கொடுக்க என்னை உந்தியது என்றார் கார்க்கி.