அமெரிக்காவில் கவிஞர் அறிவுமதி வெளியிட்ட அமெரிக்கத் தமிழரின் ‘என் செடி உன் பூக்கள்’ கவிதைகள்

0

 313 total views,  1 views today

டல்லாஸ் : அமெரிக்கத் தமிழர் முனைவர். சித்ரா மகேஷ் எழுதிய கவிதைகள் அடங்கிய ‘உன் செடி என் பூக்கள்’ புத்தகத்தைக் கவிஞர் அறிவுமதி வெளியிட்டார். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், கால்டுவெல் வேள்நம்பி மற்றும் அருண்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
 
அமெரிக்கத் தமிழர்களின் மொழி இன உணர்வுகளையும் அது சார்ந்த தமிழ் விழாக்களையும் பாராட்டிய கவிஞர்.அறிவுமதி, இத்தகைய தமிழ்ப் படைப்புகளும் இந்த மண்ணிலிருந்து வெளி வரவேண்டும். முனைவர். சித்ரா மகேஷின் கவிதைத் தொகுப்புக்குப் பாராட்டுகள். மேலும் பல படைப்புகளை அவர் படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.
 
எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசும் போது, அமெரிக்காவில் தமிழுக்கு இத்தகைய வரவேற்பும், சிறப்பும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தக வெளியீட்டில் முனைவர்.சித்ரா மகேஷின் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியான தருணமாகும். அவர் மென் மேலும் பல படைப்புகளும், இந்த மண் சார்ந்த இலக்கியங்களும் தமிழில் படைக்க வேண்டும் என்று கூறினார்.
 
தமிழ் விழா வின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பி, முனைவர். சித்ரா மகேஷின் திருக்குறள் அறிவு, எழுத்தாற்றல், தமிழ்ப் பணிகள் குறித்து விவரித்து வாழ்த்தினார். ஃபெட்னா தொழில் முனைவோர் கருந்தரங்க ஒருங்கிணைப்பாளர் அருண்குமாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
 
‘இத்தகைய பெருமை மிக்க மேடையில், என் முதல் நூலைப் பெரும் மதிப்பிற்குரியவர்களான கவிஞர். அறிவுமதி வெளியிட எழுத்தாளர் சு.வெங்கடேசன் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி, எனது வாழ்வில் முக்கியமானதாகும். 
 
வாழத்துரை எழுதிய அன்பு அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு இதயப்பூர்வமான நன்றி. உற்சாகப்படுத்தும் பதிப்பாளர் பரிதிக்கும் நன்றி’ என்று உணர்ச்சிமயமானார் முனைவர். சித்ரா மகேஷ். மேலும், தமிழ் விழாக் குழுவினருக்கும், கருத்தரங்கக் குழுவினருக்கும், நூலை வெளியிட வாய்ப்பளித்த அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமாருக்கும் நன்றி கூறினார்.
 
பரிதி பதிப்பகத்தின் சார்பில் ‘என் செடி உன் பூக்கள்’ கவிதைகள் புத்தகத்தைப் பதிப்பாளார் பரிதி வெளியிட்டுள்ளார். அமெரிக்கத் தமிழர்களின் படைப்புகளை ஆதரிக்கும் வகையில், ஃபெட்னாவின் தொழில் முனைவோர் கருத்தரங்கத்தில் இந்த புத்தக வெளியீடு நடைபெற்றுள்ளது.

 

 
Share.

Comments are closed.