அமெரிக்க தமிழரை அழ வைத்த ஹீரோ!

0

 243 total views,  1 views today

குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளமென்ட் தயாரித்து, இசையமைத்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’.

இதில் ஹீரோவாக டிட்டோ என்ற பல் மருத்துவர் அறிமுகமாக, ஹீரோயினாக பெங்களூரை சேர்ந்த ரக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கூல் சுரேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். மற்றும் டெலிபோன் ராஜ், நெல்லை சிவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

சென்னையை சேர்ந்த ஆரோக்கியசாமி க்ளமென்ட் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும், தனக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் மூலம் ‘முடிவில்லா புன்னகை’ படத்தை தயாரித்து இயக்கியிருப்பதோடு, நடித்தும் இருக்கிறார்.

முதலில் இந்த படத்தை தயாரித்து இயக்குவதை மட்டும் செய்த க்ளமென்ட், படத்தின் ஹீரோ டிட்டோ ஆரம்பத்தில் கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிக்க சம்மதித்தவர், முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்த பிறகு அதிகமான தொகையை சம்பளமாக கேட்டதோடு, கொடுத்தால் தான் நடிப்பேன், என்றும் அடம் பிடித்திருக்கிறார். இப்படி அவர் செய்த பிரச்சினையால் ரொம்பவே அப்செட்டானதோடு, ஒரு கட்டத்தில் அழும் அளவுக்கு சென்றவர், பிறகு டிட்டோவை நீக்கிவிட்டு கதையை சற்று மாற்றி, புதிய கதாபாத்திரம் ஒன்றை படத்தில் சேர்த்து, அதில் தானே நடித்தும் இருக்கிறார்.

ஆர்.எஸ்.பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையரசர் தஷி பின்னணி இசையமைத்திருக்கிறார். பாடல்களுக்கு ஆரோக்கியசாமி க்ளமென்ட் இசையமைத்திருப்பதோடு, இளையகம்பனுடன் சேர்ந்து பாடல்களும் எழுதியுள்ளார். பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார்.

தற்போது நாட்டில் விவாகரத்து என்பது பெரிகிவிட்டது. இளம் தம்பதியினரிடையே விவாகரத்து என்பது சர்வசாதரணமாகிவிட்ட நிலையில், இப்படம் அத்தகைய நிலையை மாற்றும் அளவுக்கு சிறப்பான மெசஜை சொல்வதோடு, சினிமாத்துறையில் இருக்கும் கஷ்டங்களை பற்றியும் பேசுகிறது. சினிமா என்பது கடல் போல, அதில் நீச்சல் அடித்து கரை சேர்வது என்பது மிக மிக கடினம், என்பதையும் இப்படம் விளக்குகிறதாம்.

செண்டிமெண்ட், காதல், காமெடி, மெசஜ் என்று அனைத்தையும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு உருவாகியுள்ளது, என்று கூறும் இயக்குநர் க்ளமெண்ட், இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை அமெரிக்காவில் திரையிட்டாராம். அதில் படத்தை பார்த்தவர்கள் அனைவரும், படம் சிறப்பாக இருக்கிறது, என்று கூறினார்களாம். முக்கியமாக பெண்கள் வெகுவாக பாராட்டியதோடு, தற்போதைய காலக்கட்டத்திற்கு அவசியமான படம், என்றும் கூறினார்களாம்.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வை சென்னையில் நடத்த இருக்கும் ஆரோக்கியசாமி க்ளமென்ட், பாரதிராஜா முன்னிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதோடு, விழாவில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு சிறப்பான உணவு, உடை ஆகியவற்றை வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்.

Share.

Comments are closed.