“அவர்கள் தெய்வக் குழந்தைகள்” – சைந்தவி காட்டிய பேரன்பு..!

0

Loading

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு துயர சம்பவம். சென்னையில் நடந்தது. சக மனிதர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தெய்வக்குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் இன்னும் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. 
இங்கு அந்த சம்பவம் எத்தனை பேருக்கு அது தெரியும் என்பது சந்தேகம்.
அந்த தெய்வக் குழந்தை தன் வாழ் நாட்களை அழகுற அமைத்து வந்தான். தன் குறைபாட்டிலிருந்து வெளிவந்து தன் தந்தையின் உதவியோடு இந்த உலகை அழகாக படம் பிடித்துக் கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.
அன்று அந்த துயர நாளில் அவன் தந்தை வர சற்று தாமதமாக, அவனாக வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்க… வழிதவறிப்போனான். ஒவ்வொருவரிடமும் தனக்குத் தெரிந்த மொழியில் விபர அறிவில் முகவரி சொல்ல யாரும் அவனது நிலையப் புரிந்துகொள்ளவில்லை. 
இறுதியாக தன் தந்தை தபால் நிலையத்தில் வேலை பார்ப்பவர். ஏதாவது தபால் நிலையத்திற்குப் போய்விட்டால் அவர்கள் எப்படியாவது அவன் தந்தையின் முகவரியைக் கண்டுபிடிக்க  முயற்சி செய்துவிடுவார்கள் என்று அந்த பிள்ளை அங்கும் வழி கேட்டு சென்றுள்ளது.  என்றாலும் அவனின் நிலை அவனை புறக்கணிக்க வைக்கவே பயன்பட்டது. 
இறுதியாக, களைத்துப் போய் ஒரு சாலையோரம் அமர்ந்தவனுக்கு ஏதோவொரு தண்ணீர் லாரி எமனாக மாறிப்போனான். அந்த முயற்சிமிக்க குழந்தை இவ்வுலகை விட்டுக் கடந்தே போனான். ஒரு சிறு கவனக்குறைவும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக சிதைத்துவிடும் என்று அந்த சம்பவம் இது போன்று குழந்தை கொண்டவர்களுக்கு உணர்தியது. 
இதைத் தெரிந்து கொள்ளாத, உணராத பெற்றோர்கள் இன்னும் எவ்வளவோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு கவனத்தையும், குழந்தைகள் மீதான பொறுப்புணர்வை அதிகப்படுத்தவும், இந்த சமூகம் அவர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தொடங்கியதுதான் இந்த பேரன்புடன் என்ற குறும்படம் என்றார் திருமதி ராதா நந்தகுமார். 
இவர் தயாரிக்க, மணி என்பவர் இயக்கி உள்ளார். இயக்குநர் செழியனுடன் பயணித்தவர். ஒளிப்பதிவாளரும் கூட.  நிவாஸ் புதிய அறிமுகம். கதா நாயகனாக நடித்துள்ளார். ஆனால் தெய்வக் குழந்தைகளுக்கு வெகுவாக அறிமுகமானவர். இவர்களுக்கு நான்கு வருடங்களாக யோகா சொல்லித் தருபவர். 
ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 2௦ வருடங்களாக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் திருமதி ராதா. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலமாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடுகள் குறித்த புரிதலை உருவாக்குகிறார். 
“இதுகுறித்து ஹம்மிங் பேர்ட்ஸ் ஆசிரியர் பயிற்சி மையம் உரிமையாளருமான ராஷ்மியிடம் பேசியபோது ஒரு சிறிய கனவாக இருந்த விஷயம் சிறகுகள் பெற்றது. அவரும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதற்கான சுற்றுப்புற சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பவர் தான்” என்கிறார் ராதா நந்தகுமார்.
மாற்றம் என்பது மெதுவான நிகழ்வு தான்.. ஆனால் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரக்கூடிய ஒன்று என்பதை உறுதியாக நம்புகிறார் திருமதி ராதா நந்தகுமார்.
சாதாரண மனிதர்கள் போல  கேட்டு அதை உடனடியாக உணரும்   நேரக் கோட்பாடுகளில் சில நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம் எனப்படுகிறது.. 
உதாரணமாக, சதாரண மனிதர்களாகிய  நாம் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு ஒலி அளவில் உள்ள சப்தங்களை உள்வாங்குவோம். நமது காதும், உணர்வுகளும் அதை தனித்தனியாக இது விமானம் பறக்கிற சப்தம், அருகில் பேருந்து வரும் சப்தம், ஒலிபெருக்கியில் பாடலின் சப்தம் என பிரித்துணரும். 
 ஆனால்ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்த சப்தம் ஒரே டெசிபலில் பிரித்துணர முடியாத அளவில் ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்கும்.   எந்த ஒலி எதற்கானது என்று பிரித்தறிவதில் குழப்பம் ஏற்படும். 
அப்படி ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்டால் எவ்வளவு எரிச்சல் வரும்?  அந்த எரிச்சல்தான்  அவர்களை சாதாரண மனிதர்களைப் போல் கடந்து செல்ல முடியாமல் செய்துவிடுகிறது. அவர்களையும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தத் தூண்டுகிறது. 
 இது ஒரு குறைபாடுதானே தவிர  நோயல்ல. பெற்றோர்களின் சரியான கவனிப்பு மற்றும் முறையான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு வழங்கினால், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான  குழந்தைகளை ஓரளவு இயல்பானவர்களாக மாற்றவும் அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரவும் முடியும்.
அந்தவகையில் ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 
இதை முன்னிட்டு   ‘பேரன்புடன்’ என்கிற குறும்படத்தின்   சிறப்புத் திரையிடல் சாலிகிராமம் பிரசாத் லேபில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த், பின்னணிப்  பாடகி சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டனர். குழந்தைகள் இசைத்து, நடனம் ஆடி, பாடி தங்களை வெளிப்படுத்திய ஒரு நெகிழ்வான விழாவாக அதைப் பார்க்க முடிந்தது. 
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த், “ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘பேரன்புடன்’ என்கிற மிக அற்புதமான இந்தக் குறும்படம் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும்.. 
இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக இந்தக் குறும்படத்தை உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.. அதற்கு எந்தவகையிலும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். 
இந்த தெய்வக் குழந்தைகளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மதித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துவரும் பெற்றோர்களை பார்க்கும்போது அவர்களின் கால்களில் விழுந்து வணங்க தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.
பின்னணி பாடகி சைந்தவி பேசும்போது, 
“எல்லோருமே தங்களுக்கு பிறக்கும் குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.. ஆனால் சில நேரங்களில் இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைகள் பிறந்துவிடுகின்றனர்.. 
  இவர்களைக் குறைபாடுள்ள நோயின் பெயரால் அழைப்பதை விட,  தெய்வக் குழந்தைகள் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும்.  அவர்களது குறைபாடுகளைக் கண்டு ஒதுக்காமல் நம்மைப்போல சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும்.. 
இந்தக் குறும்படம் ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்து அழகாக பேசியுள்ளது” எனக் கூறினார்.
“இந்தக் குறும்படம் உங்களை கண்கலங்க வைக்காது.. மாறாக ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மனிதர்களை உங்களில் ஒருவராக சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும், அதற்கான சாத்தியங்களையும் உங்களுக்குத் தெரியப்படுத்தும்” என்கிறார் ‘பேரன்புடன்’ குறும்படத்தின் இயக்குநர் SP மணி. 
விரைவில் அனைவரும் பார்த்து விழிப்புணர்வு கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த டீம். 
* இயக்குநர் ராம்-ன் வேண்டுகோளுக்கு இணங்க இக்குறும்படத்தின் பெயர் பேரன்புடன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Share.

Comments are closed.