அமெரிக்காவில் நடைபெறும் 91வது ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதி 347 படங்களின் பட்டியலில் ரசூல் பூக்குட்டியின் “சவுண்ட் ஸ்டோரி” இடம் பெற்றுள்ளது.
நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி படமும் இந்த இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் தென்னிந்திய சினிமா மேலும் பெருமை அடைகிறது. தென்னிந்திய திரைப்படங்கள் உலகளாவிய சந்தைகளில் வசூலில் ஒரு நிலையான இடத்தை பிடித்து வரும் வேளையில், இந்த படங்கள் கலைகளிலும் நம்முடைய திறமையை நிரூபிக்கின்றன.
சவுண்ட் ஸ்டோரி படம் முழுமையாக ஒரு பார்வை குறைபாட்டினருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு படம். பிரெயில்லி முறையில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட உலகில் முதல் படமாகவும் இது விளங்குகிறது. சமீபத்தில் 16வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தி சவுண்ட் ஸ்டோரி படத்தின் இந்திய பிரீமியர் நடைபெற்றது.
இந்த சினிமா, பார்வை திறனாளிகளுக்கு ஒரு கனவு படம் என்று சொன்ன இந்த படத்தின் நடிகரும், ஒலி வடிவமைப்பாளருமான ரசூல் பூக்குட்டி, தற்போது இந்த படம் அனைவருக்கும் கனவு நனவான தருணம் என்று குறிப்பிடுகிறார். இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டில் டேனி பாயலின் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக “சிறந்த ஒலிகலவை” பிரிவில் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கிறார் ரசூல் பூக்குட்டி.
தி சவுண்ட் ஸ்டோரி திரைப்படம் 4 மொழிகளில் வரும் மார்ச் மாதம் இறுதியில் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழில் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை பாம்ஸ்டோன் மல்டிமீடியா & பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, பிரசாத் பிரபாகர் எழுதி இயக்கியிருக்கிறார்.