Friday, February 7

இயக்குனர் அமீர் மீது வழக்கு – தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

Loading

தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில்  (08.06.2018) கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பாஜக சார்பில் திருமதி தமிழிசை சவுந்தரராசன், சிபிஐ (எம்) சார்பில் தோழர். பாலகிருஷ்ணன், அஇஅதிமுக சார்பில் திரு. செம்மலை எம்.எல்.ஏ., தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் திரு. ஞானதேசிகன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் திரு. உ. தனியரசு எம்.எல்.ஏ., இந்திய குடியரசுக் கட்சி சார்பில் திரு. செ.கு. தமிழரசன் இவர்களோடு இயக்குநர் திரு.அமீர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை திரு. கார்த்திகைச் செல்வன் அவர்கள் நடத்தினார். 

இதுபோன்ற விவாத நிகழ்ச்சியில் அரசுக்கு ஆதரவான கருத்தும் எதிரான கருத்தும் பேசப்படுவது இயல்பு. 

முதல்சுற்றில் ஆரோக்கியமான விவாதம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இயக்குநர் அமீர் அவர்கள் பேசத் துவங்கியதுடன் எதிரில் அமர்ந்திருந்த பாஜகவினர் திட்டமிட்டு கூச்சலையும், குழப்பத்தையும் உண்டாக்கி பெரும் அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்தியவர் அமைதி படுத்தியும் குழப்பம் செய்து கூச்சல் போட்ட பாஜகவினர் எப்படியாவது இயக்குனர் அமீரை பேசவிடாமல் தடுத்து அவரை தாக்க வேண்டும் என்ற நோக்குடன் மேடையை நோக்கி ஆவேசமாக வந்திருக்கிறார்கள். அவர்களை அமைதிபடுத்தும் எந்த முயற்சியும் பலன் அளிக்காமல் போகவே காவல்துறையினரும், மற்ற கட்சி தோழர்களும் இயக்குனர் அமீரை பாதுகாத்திருக்கிறார்கள். 

சுமார் 45 நிமிடத்திற்கு மேல் அந்த அரங்கில் பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தி கடும் சொற்களால் அமீர் அவர்களை வசைபாடியிருக்கிறார்கள். அதோடு, கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட பாஜகவினர் இயக்குனர் அமீர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி அந்த நிகழ்ச்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது.

இத்தனை அராஜகங்களை பாஜகவினர் அந்த அரங்கில் செய்த போது அதே அரங்கில் இருந்த அந்த கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜனின் அமைதிபடுத்தும் முயற்சிகள் எடுபடாமல் போனதை பார்க்கும்போது இது தற்செயலாக ஏற்பட்ட குழப்பம்போல தெரிவில்லை. 

இயக்குனர் அமீர் அவர்களை திட்டமிட்டு பேச விடாமல் தடுத்து அவரை தாக்கி ஏதோ ஒரு பெரிய சதி செயலை அரங்கேற்ற அங்கே பாஜகவினர் முயற்சித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கத்துணியும் பாஜகவினரின் இத்தகைய அநாகரீகமான செயலை தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அதோடு, அந்த நிகழ்ச்சியை நடத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது  153 ஏ ( இரு குழுக்களிடையே பிரிவினையைத் தூண்டுதல்), 505( பொதுமக்களிடையே அமைதியைக் குலைத்து , அரசுக்கு எதிராக நடந்து கொள்ளுதல்) மற்றும் 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கோவை மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பது ஊடகங்களை மிரட்டி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் அடக்குமுறை செயல் என்றும்,  கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்றும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. 

அதேபோல நிகழ்ச்சியில் பேசுவதற்காக அழைக்கப்பட்ட இயக்குனர் அமீர் மீதும் கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தனி மனித சுதந்திரத்துக்கும், கருத்து சொல்லும் உரிமையையும் பறிக்கும் அடக்குமுறை செயல் என்பதால் கோவை காவல்துறையின் இத்தகைய செயலுக்கு தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறை செயல்பாடுகளையும், வழக்கு பதிவு செய்து ஊடகங்களையும், தனி மனிதர்களையும் மிரட்டும் காவல்துறையின் அதிகாரதுஷ்பிரயோகத்தையும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. 

அமைதி பூங்கா என பேர் பெற்ற தமிழகத்தில் சமீபகாலமாக இதுபோன்ற தேவையற்ற அடக்குமுறைகளையும், அராஜக நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும், பாஜகவினரால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பிரச்னையில் தேவையில்லாமல் இயக்குனர் அமீர் அவர்கள் மீதும். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட வழக்குகள் அனைத்ததையும் உடனடியாக திரும்ப பெற கோவை காவல்துறைக்கு அரசு உத்தரவிடவேண்டும் எனறும், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஊடக சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படாமலும், தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் வழங்கிட வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும், இத்தகைய அடக்குமுறை செயல்கள் அனைத்து ஊடகத்தினருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி என்பதையும், தனி மனித சுதந்திரத்தை பறிக்க நடத்தப்படும் நாடகம் என்பதையும் புரிந்து கொண்டு ஜனநாயகத்தை மதிக்கிற அனைவரும் ஓரணியில் திரண்டு இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்க்க வேண்டும் என்று அனைவரையும் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. 

கோடங்கி @ ஆபிரகாம்லிங்கன்

செயலாளர்