இன்றைய இளைய தலைமுறை மன்னிக்கவும் இணைய தலைமுறை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். ஆயினும் சாக்லேட் பாய் இமைஜுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று, தன் திறமையை நிரூபித்து, நீண்ட கால் சினிமா வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறார் ஹரிஸ். அதனால்தான் படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார். அதிக எண்ணிக்கையில் படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் ஆழமான பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வரும் ஹரிஷை சமீபத்தில் சந்தித்போது கூறினார்…
” இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் எனக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என திடமாக நம்புகிறேன். காரணம் வலுமான ஸ்க்ரிப்ட். பிரதான வேடத்தில் யார் நடித்தாலும் படத்தின் கதாநாயகன் கதைதான்.
இந்தப் படத்துக்காக இயற்கை எழில் கொஞ்சும் லடாக் பகுதிகளில் படப்பிடிப்பை நடித்திவிட்டு வந்திருக்கிறோம்.உள்ளூர் மக்களின் எச்சரிக்கையையும் மீறி ஆக்ஸிஜன் குறைவாக உள்ள மலைப்பகுதிக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்தோம். திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம்.
அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும் வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது.
ஓளிப்பதிவாளர் கவின் இயற்கையின் அழகையெல்லாம் அப்படியே தன் கேமராவில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார். நேரில் பார்த்தால்கூட லடாக் இந்த அளவுக்கு அழகாக இருக்குமா என்று பார்வையாளர்கள் விழிப்புருவங்களை வியப்பால் உயர்த்துவார்கள். அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளை படம் பிடித்திருக்கறார் ஒளிப்பதிவாளர் கவின்ராஜ்” என்று லடாக் படப்பிடிப்பு அனுபவங்களை விவரித்தார்” ஹரிஷ் கல்யாண்.
ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.