எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம்

0

 225 total views,  1 views today

இரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர் படத்துக்கு சரியான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடித்திருக்கும் இந்த படம் மே 11ஆம் தேதி வெளியாகிறது. பத்திரிகையாளராக இருந்து இயக்குனராகி இருக்கும் மு மாறன் இயக்கியுள்ள முதல் படம். 
 
முன்னணி தமிழ் இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் கதைகளை எழுதிக் கொண்டிருந்த மு மாறன் இயக்குனராக அறிமுகமாக மிக முக்கிய காரணம் கிரேஸி மோகன். சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிகுமார், கேவி ஆனந்த, ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து, ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். 
 
அடிப்படையில் எழுத்தாளரான இயக்குனர் மாறன், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் புதுவிதமான கதை சொல்லும் திறனை  கையாண்டிருக்கிறார். “Non linear எனப்படும் பாணியில் கதை சொல்வது  தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். 2 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம். சுஜாதா, பாலகுமாரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய துப்பறியும் நாவல்களின் பிரபல கதாபாத்திர பெயர்களை இந்த படத்தின் கதாபாத்திரங்களுக்கு சூட்டியிருக்கிறோம். நாயகனுக்கு பரத், நாயகிக்கு ஷீலா என்ற பெயர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அஜ்மல் (கணேஷ்), ஜான் விஜய் (வசந்த்) பெயர்கள் சுஜாதா நாவல்களில் இருந்தும், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் வைஜயந்தி, வித்யா பிரதீப்பின் அனிதா கதாபாத்திரங்கள் சுபா நாவல்களில் இருந்து எடுக்கப்பட்டவை” என்றார் இயக்குனர் மாறன். 
 
நாயகன் அருள்நிதியுடனான அனுபவங்களை பற்றி இயக்குனர் மாறன் கூறும்போது, “ஆரம்பத்தில் அருள்நிதியுடன் வேலை செய்வது  பதட்டமாக இருந்தது. அவர் பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர், யாரிடமும் அவ்வளவாக பழகாதவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் சில நாட்களிலேயே நான் அசௌகரியமாக உணர்வதை புரிந்து கொண்டு என்னிடம் வந்து இயல்பாக பழகினார். மொத்த படப்பிடிப்பிலும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார், குறிப்பாக கஷ்டமான நேரங்களில் உறுதுணையாக இருந்தார், எல்லா தருணங்களிலும் படப்பிடிப்பில் இருந்தார்” என்றார்.
 
நடிகர் அஜ்மல் உடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும் மாறன், “அஜ்மல் இந்த படத்தில் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார், அருள்நிதிக்கு இணையான ஒரு கதாபாத்திரம். தனி ஒருவன் படத்தில் ஆரம்பத்தில் இவரை நடிக்க அணுக, அந்த வாய்ப்பை தவற விட்டதில் வருத்தத்தில் இருந்தார். இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார். அருள்நிதி, அஜ்மல் மோதும் சண்டைக்காட்சி படத்தின் ஒரு பெரிய ஹைலைட்” என்றார். 
 
படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளை பற்றி மாறன் பேசும்போது, “எல்லா நடிகர்களுக்கும் படத்தில் சமமான முக்கியத்துவம் உள்ளது. மஹிமா நம்பியார் நர்ஸாகவும், வித்யா பிரதீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். 60% படப்பிடிப்பு இரவிலும், பெரும்பாலான காட்சிகள் மழையிலும் எடுக்கப்பட்டுள்ளது. அருள்நிதி, ஆனந்தராஜ் இருவரும் கடுமையான காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்தனர். ஆனந்தராஜ் காட்சிகள் நகைச்சுவையாகவும் இருக்கும்” என்றார்.
Share.

Comments are closed.