என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா _ விமர்சனம்

0

 625 total views,  1 views today

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற அமர்க்களமான படத்துடன் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்.
துணை காவல் ஆணையர் ஒருவர், ராணுவ முகாமில் உள்ள உயர் அதிகாரியிடம் வந்து ஒரு ராணுவ வீரனைப்பற்றி புகார் தெரிவிக்கிறார். மது விடுதி ஒன்றில் தகராறு செய்து, பத்து பேரை அந்த ராணுவ வீரன் அடித்து நொறுக்கியதாகவும், இது குறித்து விசாரணை செய்த தன்னையும் அடித்து கையை ஒடித்து விட்டதாகவும், உடைந்த கையுடனே வந்து புகார் தெரிவிக்கிறார்.
இந்தப் புகாருக்கு ஆளான ராணுவ வீரன்தான் அல்லு அர்ஜுன். அநீதிகளைக் கண்டால் பொங்கி எழுந்து அடித்து நொறுக்குகிறரா். இதனால் உயர் அதிகாரியால் பல முறை கண்டிக்கப்பட்டும், தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இவரது மிகப் பெரிய கனவு எல்லைப் பகுதிக்குச் சென்று காவல் பணியில் ஈடுபடவேண்டும் என்பதுதான்.
ஆனால் அடிக்கடி அடிதடியில் ஈடுபடும் அல்லு அர்ஜூனு்க்கு ராணுவ வீரன் பணியே போய்விடும் போலிருக்கிறது.
மிகவும் புகழ் பெற்ற உளவியல் பேராசிரியரிடம் நற்சான்றிதழ் பெற்று வந்தால்தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று கண்டிப்பாகக் கூறிவிடுகிறார் ராணுவ உயர் அதிகாரி.
உளவியல் பேராசிரியரோ 21 நாள்கள் எந்த அடிதடி சண்டைக்கும் போகாமல் இருந்தால்தான் சான்றிதழ் தரமுடியும் என்று கூறிவிடுகிறார்.
21 நாள்கள் அல்லு அமைதிகாத்தாரா…. எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறியதா என்பதுதான் கதை.
படத்தின் துவக்கத்திலிருந்த இறுதிவரை அல்லு அர்ஜுன் ராஜ்ஜியம்தான். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். சண்டைக்காட்சிகளில் பின்னி எடுக்கிறார். நடனத்திலும் மட்டும் என்ன… பிரமாதமான ஸ்டெப்களில் பிச்சு உதறுகிறார்.
சில மொழி மாற்றப் படங்களை நேரடிப்படம்போல் விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் என் பெயர் சூர்யா மொழி மாற்றப் படமாக இருந்தாலும், நேரடிப் படம்போல் அவ்வளவு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வசனங்கள் அவ்வளவு அழகாக வாயசைவுடன் ஒத்துப்போகிறது. இது நேரடித் தமிழ்ப்படம்தான் என்று சொன்னாலும் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.
நாட்டுப் பற்றின் அவசியத்தையும் நாட்டு நடப்பின் யதார்த்தத்தையும் நறுக்கு தெறித்தாற்போன்ற வசனத்தால் மனதில் பதியச் செய்திருக்கிறது விஜய் பாலாஜியின் வசனம்.
கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லட்சுமண் என்று நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கின்றனர். தாங்கள் அமைக்கும் சண்டைக்காட்சிதான் சிறப்பாக அமைய வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு பணியாற்றியிருப்பார்கள் போலும். அத்தனை சண்டைக் காட்சிகளும் அருமையாக அமைந்திருக்கின்றன.
கோட்டகிரி வெங்கடேஸ்வரராவின் படத்தொகுப்பும், ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
விஷால் சேகரின் இசையில் உருவான பாடல்கள் ரசிக்கும் ரகம் என்றாலும் இதுபோன்ற விறுவிறுப்பான படத்துக்கு அது வேகத்தடை என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ்ப்படவுலகிலும் தடம் பதிக்க நினைக்கும் தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜுனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனத் தோன்றுகிறது. ஏற்கெனவே ரெட் பஸ் விளம்பரம் மூலம் தமிழக ரசிகர்களிடம் மிகப் பரவலான அறிமுகம் பெற்றவர் இப்போது ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்ட நல்ல கதையம்சம் உள்ள படத்தில் அட்டகாசமாக தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
அடுத்த சில மாதங்களுக்கு அல்லு அர்ஜூன் நடிக்கும் இருமொழிப் படங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

 

Share.

Comments are closed.