ஒரு குப்பைக் கதை _ விமர்சனம்

0

 397 total views,  1 views today

ஒரு குப்பைக் கதை _ விமர்சனம்

  • ஒரு திரைப்படத்தைத் துவக்குவதென்பது மகத்தான கலை. குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு கேமரா காத்திருக்க வேண்டும். அந்தக் கதாபாத்திரம் வந்த உடனே மளமளவென கதையை சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விமர்சகர் ஒருவர்.

ஒரு குப்பைக் கதை படத்தில் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நாயகன் தினேஷ் மாஸ்டர் சற்றே திரும்ப,  முழு முகத்தையும் கேமரா பார்வையாளர்களுக்கு அறிமுப்படுத்தியபின், ஒரு குவார்ட்டரை உள்ளே இறக்கிவிட்டு, மெதுவாக நகர்ந்து ஒசூருக்கபு புறப்படும் பேருந்தில் ஏறுகிறார்.  நாலரை மணியளவில் ஒசூர் சென்றடைந்து அங்கு ரோந்துப் பணியில் இருக்கும் காவலரிடம் பெயரெழுதப்படாமல் முகவரி மட்டுமே இருக்கும் துண்டுக் காகிதத்தைக் காட்டி விசாரிக்கிறார். காவலரும் விலாவரியாக விலாசத்தை விவரித்துவிட்டு நிலையப் பணிக்கு திரும்பிய சற்று நேரத்தில் நயாகன் அவரிடம் வந்து தான் ஒரு கொலையை செய்துவிட்டதாகச் சொல்லி சரணடைகிறார்.
இந்த இடத்தில் துவங்கும் படம் அழகான திரைக்கதை மூலம் இறுதிவரை அற்புதமாகப் பயணிக்கிறது. சென்னை கூவம் கரையில் தாயுடன வசித்தபடி துப்பரவுப் பணியை செய்கிறார் மாஸ்டர் தினேஷ். குப்பை அள்ளுவதைக் கேவலமாக நினைக்காமல் அதையும் ஒரு உழைப்பாகக் கருதி பணியாற்றும் நாயகன், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, தன் பணியை மறைத்து அழகான பெண் மனிஷா யாதவை மணந்து கொள்கிறார். ஆயினும் மனிஷாவின் அப்பாவிடம் தன் வேலையைப் பற்றி விவரித்து மணம் செய்து கொள்ள மறுக்கும்போது, உண்மையை பேசும் உங்களைவிட வேறு நல்ல மாப்பிள்ளை என் பெண்ணுக்குக் கிடைக்காது என்று சொல்லி தினேஷ் மாஸ்டரை சம்மதிக்க வைக்கிறார் அவர்.
கணவருடன் சென்னையில் வசிக்கும் மனிஷா கர்பமடையும்போது, எழுத்தர் வேலை பார்ப்பதாக சொல்லப்பட்ட தன் கணவர் லாரியில் குப்பை அள்ளிப்போடும் காட்சியை நடுவீதியில் பார்த்துவிட்டு கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்று விடுகிறார். குழந்தை பிறந்த பின் சென்னை வரும் மனிஷா கணவருடன் அடுக்ககம் ஒன்றிீல் வசிக்கத் துவங்குகிறார்.
அண்டை வீட்டில் வசிக்கும் பிளேபாய் இளைஞனால் விளிம்பு நிலையில் வசிக்கும் இந்த இளம் தம்பதியின் குடும்பம் எப்படி சீரழிந்து சின்னா பின்னமாகிறது என்பதுதான் ஒரு குப்பைக் கதை.
பெண்ணைப் பார்த்துவிட்டு தனியாக வருங்கால மாமனாரிடம் மட்டும் உண்மையில் தான் குப்பை அள்ளும் பணியைப்பற்றி சொல்லும் நாயகன் அவ்வளவு நல்ல மனிதனாக இருந்தால் பெண் பார்க்கச் சென்றிருக்கவே கூடாதே என்று நம் மூளை கேள்வி கேட்காது. காரணம் காட்சியமைப்புகள் நெஞ்சுக்கு நெருக்கமாகி படத்துடன் நம்மை ஐக்கியப்படுத்தி விடுகின்றன.
ஆனாலும், சூப்ரவைசர் தன் வீட்டைக் குறைந்த வாடகைக்கு எனக்குத் தருகிறார் என்று சொல்லி மனைவி குழந்தையை போஷ் அபார்ட்மெண்டில் குடியமர்த்துவது என்பதெல்லாம் சாரி.. கொஞ்சம் ஓவர்தான். கார் பார்க்கிங்குடன் உள்ள அவ்வகை அடுக்ககங்களில்  (மாத வாடகை இல்லாமல்) மாதாந்திர பராமரிப்புக் கட்டணமே நான்கிலக்க எண்ணில்தான் இருக்கும்.

நாயகன் வேடத்துக்கு அச்சு அசலாக அப்படியே பொருந்திப்போகிறார் தினேஷ் மாஸ்டர். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் கணவனுடன் வசிக்க சென்னை வரும் மனிஷா, கிளார்க் வேலை பார்ப்பதாக பொய் சொல்லி தன்னை திருமணம் செய்துகொண்ட கணவன் தெருவில் குப்பை அள்ளுவதைப் பார்த்து உடைந்து போகும் தருணத்தில் தொடங்கி, இறுதிக் காட்சிவரை மிக இயல்பாக நடித்து முத்திரை பதித்திருக்கிறார்.
படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகிப்பது நாயகன் நாயகி தேர்வு மட்டுமல்ல, நாயகியின் தந்தையாக வரும் ஜார்ஜ் தொடங்கி அடுக்ககப் பாதுகாவலர் பணி செய்பவர்வரை அவ்வளவு துணை பாத்திரங்களையும் மிக கவனமாகத் தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பதுதான்.  இதற்காகவே அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமிக்கு தனியாக ஒரு பாராட்டு சொல்லலாம். படத்தை எழுதி இயக்கியிருக்கும் காளி ரங்கசாமி அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பை இப்போதே ஏற்படுத்திவிட்டார்.
ஏராளமான படங்களில் டாப் ஹீரோக்களுக்கு நடனக்காட்சி அமைத்த தினேஷ் மாஸ்டர்தான் இந்தப் படத்துக்கும் நடனங்களை அமைத்திருக்கிறார். உடலை வளைத்து நடனம் ஆட அவர் இளைய தளபதி விஜய் இல்லையே… குப்பை அள்ளுபவர்தானே…எனவே அடக்கி வசித்திருப்பதுகூட ரசிக்கும்படி இருக்கிறது.
கூவம் கரையோரக் குடிசைகளை பேக் லைட் எஃபெக்ட் கொடுத்து பில்டர்களை போட்டு அசத்தலான ஒளிப்பதிவை செய்யாமல், நாமே அங்கே வா ழ்ந்துவிட்டு வந்ததைப்போன்ற உணர்வைத் தருவதுதான் மகேஸ் முத்துசாமியின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்த வெற்றி. மனுஷன் கதை என்ன கேட்கிறதோ அதை மட்டுமே கொடுத்திருக்கிறார்.

நினைக்கிறதெல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்குக் கிடைக்கிறது என்று கவித்துவமான வரிகளில் தொடங்கும் பாடல் கதைக்கருவை சொல்வது மட்டுமல்ல, காலம் காவு கொண்ட கவிஞன் முத்துகுமாரின் இழப்பையும் சொல்கிறது. நா.முத்துகுமாரின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் ஜோஷ்வா ஸ்ரீதரும், பின்னணி இசையை அமைத்திருக்கும் தீபன் சக்ரவர்த்தியும் தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

தான் நடிக்காத, தயாரிக்காத படத்தை விஷயமில்லாமலா உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுவார் என்று எதிர்பார்ப்புடன் வருபவர்களை அந்த எதிர்பார்ப்புக்கும் மேலாகவே திருப்திபடுத்தும் படுத்துகிறது ஒகு குப்பைக் கதை.
நல்ல படம் என்பது எப்போதாவதுதான் வரும்…
இப்போது வந்திருக்கிறது.
ம்…அடுத்து எப்ப வருமோ…

Share.

Comments are closed.