தரமான கதை களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிக துல்லியமாக உள் வாங்கி கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்‘ நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி சத்தியமூர்த்தி. இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.
வி சத்யமூர்த்தி தயாரித்து நடிக்கும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் – ‘எருமசாணி‘ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார். ‘மெட்ராஸ் சென்ட்ரல்‘ புகழ் கோபி – சுதாகர், ‘எரும சாணி‘ புகழ் விஜய் – ஹரிஜா, ‘புட் சட்னி‘ புகழ் அகஸ்டின், ‘டெம்பில் மங்கிஸ்‘ புகழ் ஷா ரா – அப்துல் மற்றும் ‘BEHINDWOODS’ புகழ் வி ஜே ஆஷிக் ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படத்தில் பணியாற்றும் நடிகர் – நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருமே 21 வயதிற்கு கீழ் இருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு. இளம் கலைஞர்களின் தனித்துவமான படைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா J பெரேஸ் (அறிமுகம்), இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்), படத்தொகுப்பாளராக தோபிக் – கணேஷ் (அறிமுகம்) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
“அறுபது நாட்களில் நிறைவு செய்ய வேண்டிய படப்பிடிப்பை வெறும் 45 நாட்களில் நிறைவு செய்து இருக்கிறார், அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட். அவர் தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதிப்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். எங்களின் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படத்தில் பணியாற்றி இருக்கும் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும், நடிகர் – நடிகைகளும், தங்களின் முழு ஒத்துழைப்பை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மேலும், ‘யூடியூப்‘ சமூக வலைத்தளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் கலைஞர்கள் பலரை, ஒரே படத்தில் ஒன்று சேர்த்து இருக்கும் பெருமை எங்களின் ‘கிளாப்போர்ட்‘ தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது. அதுமட்டுமின்றி, ஏராளமான இளம் ரசிகர்களை தங்களின் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை காணொளிகள் மூலம் கவர்ந்து வரும் ‘எருமசாணி‘ ஜோடி விஜய் – ஹரிஜா, கோபி – சுதாகர், அகஸ்டின், ஷா ரா, அப்துல் மற்றும் வி ஜே ஆஷிக் ஆகியோரை, முதல் முறையாக மிக முக்கிமான கதாபாத்திரங்களில் ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் காண உள்ளனர். எங்கள் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். கோடை விருந்தாக வருகின்ற மே மாதம் எங்கள் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று மனநிறைவோடு கூறுகிறார் தயாரிப்பாளரும், ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்‘ நிறுவனத்தின் நிறுவனருமான வி சத்தியமூர்த்தி.