கடிகார மனிதர்கள் – விமர்சனம்

0

 406 total views,  1 views today

சென்னை மாநகரில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் அவஸ்தைகளையும், நரகத்துக்கு நிகரான வாழ்க்கையையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் கடிகார மனிதர்கள்.
பேக்கரியில் வேலை பார்க்கும் கிஷோர் தன் மனைவி லதாராவ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பாலா சிங்கின் காம்ப்பவுண்டில் உள்ள ஸ்டோர் வீடு ஒன்றுக்கு வாடகைக்கு குடிவருகிறார். வண்டியில் சாமான்களுடன் வீடு தேடி வந்ததால், நான்கு பேர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற பாலாசிங்கின் நிபந்தனையை ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் கிஷோருக்கு.
மறைக்கப்பட்ட நான்காவது பையனை அன்றாடம் பேக்கரி பெட்டியிலேயே மறைத்து வைத்து எடுத்துச் சென்று பள்ளியில் விட்டு அழைத்து வருகிறார் கிஷோர்.
பாலாசிங்கின் மகள் ஷெரீனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டால் அத்தனை வீடுகளுக்கும் சொந்தக்காரராகிவிடலாம் என்ற கனவுடன் கருணாகரன் மற்றொரு வீட்டுக்கு வாடகைக்கு வருகிறார். சினிமாவில் பெரிய நடிகராகிவிட வேண்டும் என்ற கனவுடன் பிரதீப் மற்றொரு வீட்டில் குடியிருக்கிறார்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்னைகளும், அந்தப் பிரச்னை அடுத்தவருக்கு தெரிய வரும்போது அவர்கள் அதை எப்படி எதிர்கொண்டு உதவுகிறார்கள் என்பதையும் மிக அழகான திரைக்கதை மூலம் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வைகறை பாலன். கதை வசனமும் இவரே. தேர்ந்தெடு்த்திருக்கும் கதையும் அதை படமாக்கிய விதமும் வைகறை பாலன் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது.
உமா சங்கரின் ஒளிப்பதிவு எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் கண்முன் நடக்கும் சம்பவங்களைப் பார்ப்பதுபோல் யதார்த்தமாக இருக்கிறது.
ஷாம் சி.எஸ்.இசையில் உருவான ஏனோ வீடு தேடி கால்கள் என்ற பாடல் உருக்கமாக இருக்கிறது. இயக்குநரால் எழுதப்பட்டு இசையமைப்பாளரால் பாடப்பட்ட இந்தப்பாடல் கதைக்களத்தை குறுக்கு வெட்டுப் பார்வையில் பதிவு செய்கிறது.
மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட மகன் பள்ளியில் பரிசுக்கோப்பை வாங்கும்போது, மேடைக்கு பெற்றோர் அழைக்கப்பட, பாலாசிங் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக கிஷோரும் லதாராவும் போகாமல் இருப்பது கண்களை கலங்க வைக்கும் காட்சி.
கிஷோரும் லதாராவும் மிக இயல்பான நடிப்பால் நம் நெஞ்சில் நிறைகிறார்கள்.
பள்ளியில் படிக்கும் சிறுவனை ஐந்தாவது ஆளாகக் கருதி வீடு தர வீட்டுச் சொந்தக்காரர் மறுப்பாரா…தண்டல் வட்டிக்கு கடன் தரும் வாசு விக்ரம், கூலிப்படை ஆட்களை இயக்கி கொலை செய்பவராகக் காட்டியிருப்பது ஏன் போன்ற கேள்விகள் எல்லாம் எழாமல் இல்லை.
வாடகை வீட்டில் வசிப்பவர்களின் வலிகளை இயல்பாகப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை எடுத்துவிட்டு, சப் டைட்டிலுடன் திரைப்பட விழாக்களுக்கு தராளமாக அனுப்பலாம்.
தவறாமல் பார்க்க வேண்டிய தரமான படம் கடிகார மனிதர்கள்.

Share.

Comments are closed.