தமிழகம் மற்றும் புதுவை, கர்நாடக மாநில கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகப்
பொறுப்பாளர்கள், இயக்கத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தனர். வருகிற ஃபெப்ரவரி 21 ஆம் தேதி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ராமநாதபுரத்தில் துவக்க இருக்கிற புதிய கட்சிக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர். இயக்கத் தலைவர், பொறுப்பாளர்களின் சமூகப் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அரசியலில் புதுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைவரின் பயணத்தில் அனைத்து பகுதிகளிலுமிருந்துக் கலந்து கொள்வோம் என்று பொறுப்பாளர்கள் உறுதியளித்தனர். 37 வருடங்களாக நற்பணி இயக்கத்தின் மூலம் சமூகத் தொண்டாற்றி வரும் இயக்கத் தோழர்கள் அனைவரும் ஃபெப்ரவரி 21 ஆம் தேதிக்காகக் காத்திருக்கின்றனர். முதற்கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் மக்களோடு மக்களாகக் கலக்கவும், கலந்துரையாடவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தலைவருடன் இணைந்து பயணிக்க ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
இவ்வாறு கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர் இரா. தங்கவேலு கூறினார்.