கலைஞர் புகழ் வணக்கம் – கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்

0

 196 total views,  1 views today

 

தி.மு.க தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெற்றித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த நிகழ்வுக்குக் ‘கலைஞர் புகழ் வணக்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

கலைஞரைத் தன் தமிழாசான் என்று எப்போதும் சொல்லிவரும் கவிஞர் வைரமுத்து 35 ஆண்டுகளாய்க் கலைஞரோடு அரசியல் சாராமல் நெருக்கமாய் இருந்தவர்.  இருவரும் ஒவ்வோர் அதிகாலையிலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தவர்கள். கலைஞர் நூல்களை வைரமுத்துவும், வைரமுத்துவின் நூல்களைக் கலைஞரும் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘ஒரு நூற்றாண்டைப் புதைத்துவிட்டோம்’ என்று கலைஞர் நினைவிடத்தில் அழுது புலம்பிய கவிஞர் வைரமுத்து அறிவுலகத்தின் சார்பில் அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்துகிறார். ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ‘தி மியூசிக் அகாடமி’ அரங்கில் கலைஞர் புகழ் வணக்கம் நிகழ்கிறது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, இயக்குநர் பாரதிராஜா, நக்கீரன் கோபால், பேராசிரியர் தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் மலர் வணக்கம் செலுத்திய பிறகு அவையில் அமர்ந்திருக்கும் முக்கியப் பிரமுகர்கள் மேடைக்கு வந்து கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்துகிறார்கள்.

கவிஞர் கபிலன் வைரமுத்து நிகழ்வை நெறிப்படுத்துகிறார். வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார், ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேஷ், சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், செல்லத்துரை, காதர் மைதீன், சண்முகம் ஆகியோர் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Share.

Comments are closed.