வெற்றிகராக ஓடிய படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கும்போது, நாயகன் அல்லது நாயகியை மட்டும் மாற்றாம்ல் இதர பாத்திரங்களை மாற்றுவது அல்லது முதல் பாகத்துக்கே சம்பந்தமில்லாத வேறு ஒரு கதையை உருவாக்குவது, அல்லது முந்தைய பாகத்தின் டைட்டிலை மட்டும் வைத்துக்கொண்டு முற்றிலும் புதிய நடிக நடிகையர், கதைக் களம் என படமெடுப்பது என்று பல வகை உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வணிக வெற்றியும் விமர்சன வரவேற்பும் பெற்று, அதில் பங்கு பெற்ற பலருக்கும் திருப்புமுனையாக அமைந்த படம் ஏ.சற்குணம் இயக்கத்தில் வெளியான களவாணி.
விமல் ஒவியா ஆகிய இருவரும் அறிமுகமான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது சற்குணம் இயக்கத்திலே உருவாகியிருக்கிறது. நடிகர் சூரியைத் தவிர முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிக நடிகையர் இரண்டாம் பாகத்திலும் இணைந்திருக்கிறார்கள். நாயகன் விமலின் நண்பராக ஆர்.ஜே, விக்னேஷ் நடிக்கிறார்.
இம்மாதம் 22ஆம் தேதியுடன் படப்பிடிப்பை நிறைவு செய்யும் களவாணி 2 படத்தின் பின் உருவாக்கப் பணிகளும் தொடர்ந்து இடைவெளியின்றி நடக்கவிருக்கிறது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற “ஒட்டாரம் பண்ணாத…: என்ற பாடல் இப்போதே சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்து, யூ டியூபில் இரண்டரை கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
மிகப் பிரபலமான “அலுங்குறேன் குலுங்குறேன்…: என்ற பாடலை எழுதிய மணி அமுதவன்தான் இந்தப் பாடலையும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கலை இயக்குனர் குணசேகரன் உருவாக்கிய பழமையான வீடு ஒன்றில் இப்பாடல் காட்சி படமாக்கப்படிருக்கிறது. செட்டிங் என்று சொல்ல முடியாத வகையில் நிஜத்துக்கு நெருக்கமாக, தத்ரூபமாக கலை இயக்குநரால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பழமையான வீடு, படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.