குரங்கு பொம்மை – விமர்சனம்

0

Loading


அரைத்த மாவையே அரைக்கும் அதிபயங்கரமான புளிப்பு வாடை வீசும் மட்டமான படங்களுக்குக்கூட எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான படம் என்று விளம்பரம் செய்பவர்களுக்கு மத்தியில், உண்மையிலேயே ஒரு புதுமாதிரியான அற்புதப்படைப்பாக வந்திருக்கும் படம்தான் குரங்கு பொம்மை.
மரக்கடை நடத்திவிரும் தேனப்பன் கோவில் சிலைகளை கடத்தி விற்கும் நிழலான வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். தன்னிடம் வேலைபார்க்கும் மிக மிக நம்பகான பாரதிராஜாவிடம் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலையைக் கொடுத்து அதை சென்னையில் உள்ள ஏஜண்ட் குமரவேலிடம் சேர்க்கச் சொல்லி அனுப்பி வைக்கிறார் தேனப்பன்.
ஆனால் குமரவேலு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பாரதிராஜாவை கொன்றுவிட்டு அந்த சிலையை தானே விற்பனை செய்து பணத்தை அபகரிக்கிறார்.
சென்னையில் வேலை பார்க்கும் பாரதிராவின் மகனான விதார்த் சென்னை வந்த தன் தந்தை எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியாமல் தவிப்புடன் தேடத்தொடங்குகிறார்.
இறுதியில் விதார்த் குமரவேலுவை கண்டுபிடித்தாரா, அவருக்கு என்ன தண்டனை கொடுத்தார் என்பதுதான் குரங்கு பொம்மை படத்தின் கதை.
படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை வெகு நேர்த்தியாக திரைக்கதை செதுக்கியிருக்கிறார்கள்.
ஐந்து கோடி ரூபாய் கிடைக்கும் என்றால் என் அப்பாவையே நான் கொலை செய்வேன், உங்க அப்பாவை நான் கொலை செய்ய மாட்டேனா என்று சர்வ அலட்சியமாக விதார்த்தைப் பார்த்து குமாரவேல் பேசும் வசனம் அவரது கொடூரத்தை அருமையாக வெளிப்படுத்துகிறது என்றால், இறுதியில் உண்மை தெரிந்து கொள்ளும் விதார்த் கொடுக்கும் தண்டனை அதைவிட பயங்கரமானது.
என்னதான் இவ்வளவு அப்பாவியாக பாரதிராஜா இருந்தாலும், தேனப்பனை இப்படி கண்மூடித்தனமாக நம்ப வேண்டும், அவரை விட்டு விலகி வேறு யாரிடமாவது வேலை பார்கப் போகலாமே…. என்றெல்லாம் படம்பார்க்கும்போது மனதில் தோன்றும் காட்சிகளுக்கெல்லமா பாரதிராஜா கொல்லப்படும்போது சொல்லும் கதையில் விடை இருக்கிறது. பாரதிராஜா தேனப்பனைவிட்டு விலகாமல் இருக்கும் காரணத்தை இதைவிட எப்படி நியாயப்படுத்திவிட முடியும்.
பாரதிராஜா, விதார்த், நாயகி டெல்னா டேவிஸ், தேனப்பன் குமரவேல் என்று அனைவருமே தங்கள் பாத்திரங்களில் முத்திரை பதிக்கும் விதத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
யார் அந்த காமெடி பிக்பாக்கெட் திருடன். அட்டகாசம் செய்து அமர்களப்படுதியிருக்கிறார். தமிழ்பபடவுலகி்ல் அவருக்கான இருக்கை தயாகிவிட்டது.
நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் தெளிவாகப் புரியும்படி இருப்பதற்காவே இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தையும் இயக்குநர் நித்திலனையும் கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்.
அபினவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்புக்கு வெகுவாகத் துணை செய்கிறது.
என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கும் முக்கியமான அம்சம் என்றால் மிகையாகாது.
அறிமுக இயக்குநர் நித்திலனுக்கு கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருதி்ல் ஆரம்பித்து மாநில் தேசிய விருதுகள்வரை பலவற்றையும், அறிமுக இயக்குநர் நித்திலன்அள்ளுவார் என்று தோன்றுகிறது.
நல்ல படம் என்பது எப்போதோ ஒரு முறைதான் வரும். இப்போது வந்திருக்கிறது….. ம்… இனி அடுத்தது எப்பவோ…

Share.

Comments are closed.