குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன.
இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கு சக்கரம்‘. இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப்போலவே இந்தப்படம் இருப்பதையும் உணர முடிகிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை தயாரித்த லியோவிஷன் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் கே.சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த சங்கு சக்கரம் படத்தை தயாரித்துள்ளார்கள்.
திலீப் சுப்பராயன், கீதா, ஜெர்மி ரோஸ் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.. இந்தப் படத்துக்கு ஷபீர் இசை அமைக்கிறார். திலீப் சுப்பராயன் இந்த படத்துக்காகவே ஒரு வருடமாக முடி வளர்த்து நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் நடித்துள்ள பத்துக்கும் மேற்பட்ட குட்டீஸ்கள் நடித்துள்ளனர், பத்து பேரும் பத்து ரகம். இவர்கள் எல்லோரையும் சமாளித்து சமர்த்தாக வேலைவாங்கி அவர்களது சுட்டித்தனங்களை திரையில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் மாரிசன். ஃபேண்டஸி ஹாரர் காமெடியாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் குட்டீஸ்கள் செய்யும் சில வீர தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் இதில் காட்டியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் நாயகி கீதா படத்தில் பேயாக நடித்துள்ளார். இதற்காக அவர் படப்பிடிப்பில் பாதி நாட்கள் 20 நாட்களுக்கும் மேல் தரையில் இருந்ததை விட கயிறுகட்டி அந்தரத்தில் தொங்கிய நேரம் தான் அதிகம்.. ஆனாலும் அந்த கேரக்டரின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வலியை பொறுத்துக்கொண்டு நடித்துள்ளார். அதேபோல படத்தில் குட்டிப்பேயாக நடித்துள்ள பெண்ணும் தினசரி நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.
“சஸ்பென்ஸ் , திரில், சுவாரஸ்யம், கிண்டல் எல்லாம் கலந்த ஒரு சுழலில், அதாவது தீபாவளிக்கு சங்கு சக்கரம் விடுகிற மாதிரியான சந்தோஷத்தில். படம் பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள். அதனால் தான் ‘சங்கு சக்கரம்’ என டைட்டில் வைத்துள்ளோம் என்கிறார் இயக்குனர் மாரிசன்.
இந்தப்படத்தின் இயக்குனர் ரஞ்சித், மறைந்த தனது தந்தை மாரியின் நினைவாக தனது பெயரை மாரிசன் என மாற்றிக்கொண்டு இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.