கோலி சோடா 2 படத்துக்கு ஒரு வுித்தியாசமான விழா

0

 185 total views,  2 views today

வெளியீட்டுத் தயாராக இருக்கும் படத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டுபோய் விளம்பரப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உதவுவது என்பது தனி கலை. அந்தக் கலையில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருமான விஜய் மில்டன் விற்பன்னர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காரணம் கோலி சோடா 2 படத்தை ஆரம்பித்தது முதல், வரும் 14ஆம் தேதி வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இந்த நிமிடம்வரை அழகாகவும், அர்த்தமுள்ள வகையிலும் விளம்பரப்படுத்தி வருகிறார்.
ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலோ அல்லது ஆடியோ வெளியீட்டு விழாவிலோ மாலை மரியாதை, பொன்னாடை என்று மேடையில் அமர்க்களப்டுத்துவதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் கோலி சோடா 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் முதலில் ஒரு ஆடியோ விஷுவலைத் திரையிட்டார்கள். இதில் படத்தில் நடித்த நடிக நடிகையரும், தொழில் நுட்பக் கலைஞர்களும் தங்கள் அனுபவங்களை சுவைபடப் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் வரவேற்புரை நிகழ்த்திய விஜய் மில்டன், கோலி சோடா முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகம் இருக்கக்கூடாது என்ற தீர்மானமான முடிவுடன்தான் நான் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தேன். ஏனென்றால் படம் பார்க்க வருபவர்கள் முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகம் இல்லையே என்று எளிதாகச் சொல்லிவிடக்கூடாது என்பதுதான் என்றார்.
படத்தொகுப்பாளர் தீபன் பேசுகையில், விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் சின்ன க்ளாஷ் ஒர்க்தான் செய்து கொடுத்தேன். டைட்டில் கார்டில் என்ன பெயர் போட வேண்டும் என்று அவர் கேட்டபோது, அடுத்த படத்தில் எடிட்டர் என்று என் பெயரைப் போடுங்கள் என்று விளையாட்டாகச் சொன்னேன். ஆனால் நிஜமாக கோலி சோடா 2 படத்துக்கு என்னை எடிட்டராகி அழகு பார்த்துவிட்டார் என்று நெகழ்ச்சியடன் குறிப்பிட்டார்.
அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் நானும் என்னைப் போன்ற புதுமுக நடிகர் நடிகைகளும் நடித்திருப்பது எங்களுக்கு மிகச் சிறந்த பயிற்சியாகவும் அனுபவமாகவும் அமைந்து விட்டது என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் பரத் சீனி.
முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், விஜய் மில்டன் கோலிசோடாவில் நடிக்க என்னைக் கேட்டபோது வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். சமுத்திரக்கனியைத் தவிர வேறு சொல்லிக் கொள்ளும் அளவு எந்த நட்சத்திரமும் இல்லை என்று சொன்னார். சமுத்திரக் கனி என்ற பெயரைக் கேட்டதுமே படத்தில் நடிக்கத் தயார் என்று என் சம்மதத்தைச் சொன்னேன் என்று கூறியபோது சமுத்திரக்கனி மீது சக கலைஞர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை புரிந்தது.
கோலி சோடா 2 படத்தின் விளம்பர பட்ஜெட்டில் ஒரு பகுதியை சமூகப்பணிகளுக்கு செலவு செய்யும் திட்டத்தையும் விவரித்தார் விஜய் மில்டன்.
ஜி.எஸ்.டி. என்று பெயரிடப்பட்ட ஒரு வண்டியில் சாமான்ய ம்க்களுக்குப் பயன்படும் வகையில் மோர், இளநீர், உணவுப் பாெட்டலங்கள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு சென்னையின் பல பகுதிகளுக்கும் சென்று வழங்க இருப்பதாகவும், இறுதியில் ஏதேனும் ஒரு அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் விடுதியில் உள்ளவர்களுக்குக் கொடுத்து அன்றைய பயணத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் விஜய் மில்டன். சென்னை,மதுரை, கோவை என்று தமிழகத்தில் ஆறு நகரங்களில் இந்த ஜி.எஸ்.டி.வண்டி இயக்கப்படுகறது. சமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வமுள்ள நடிகர் சூர்யாதான கொடியசைத்து இந்த வண்டிகளைத் துவக்கி வைத்திருக்கிறார்.
கோலி சோடா 2 படத்தில் நடித்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைவிட அதிக கவனம் ஈர்த்தவர்கள் விழாவுக்கு வரவழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள்.
முதலாவது சிறப்பு விருந்தினர் கோவையிலிருந்து வந்திருந்த ராஜா சேது முரளி. உணவு விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் வீணாகும் உணவுப் பொருள்களை சேகரித்து வந்து ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறார். ஆதரவற்ற முதியவர்கள் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் அன்றாடம் இந்த உணவுக்காக காத்திருந்து வாங்கி சாப்பிடுகின்றனர். பசியாற உணவு என்பது இந்தத் திட்டத்தின் பெயர். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் வசதியற்ற மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், சீருடை என்று ஏராளமான உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.
இதேபோல வடலூரிலிருந்து வந்திருந்த காந்திமதி அம்மையார் என்ற மூதாட்டி வள்ளலாரின் ஆசியுடனும், அன்பர்கள் சிலரின் ஆதரவுடனும் பசிப்பிணிப் போக்கும் பணியை விவரித்த விதம் நெஞ்சைத் தொட்டது.
இறுதியில் நன்றியுரை நிகழ்த்த வந்த விஜய் மில்டன், கோலிசோடா 2க்கு பேருதவி செய்த பாண்டிராஜ் லிங்குசாமி ஆகியோரில் தொடங்கி நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். சமுத்திரக் கனியிடம் சம்பள விஷயமாக பேச ஆரம்பித்தபோதே, அதைப் பற்றி இப்போது எதற்கு என்று சொன்னதுடன், வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இந்த நிலைக்கு வந்த பிறகுகூட இதுவரை ஒரு பைசாகூட வாங்காமல் இருக்கிறார் என்று சொன்னபோது அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.
இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்ட் சத்தியமூர்தி பேசும்போது, கோலி சோடா படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லியிருந்தார் விஜய் மில்டன். அவரது இயக்கத்தில் உருவான கடுகு படத்தை நான் விநியோகித்து எனக்கு ஒரு நல்ல அடையாளமாக அமைந்தது என்றார்.
வழக்கமான ஒரு திரைப்படத்துக்கான ப்ரமோஷன் விழாவாக இல்லாமல் எளிய மனிதர்களுக்கு உதவும் வகையில் கோலி சோடா 2 பட விழா அமைந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

Share.

Comments are closed.