சீம ராஜா – விமர்சனம்

0

 639 total views,  1 views today

 

சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் வழிவந்த சிவகார்த்திகேயன் வெட்டி ஆபீசராக ஊரை வலம் வந்து கொண்டிருக்கிறார். தந்தை நெப்போலியன் அவ்வப்போது அவரைக் கண்டித்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், ஜாலியாக இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் நண்பன் சூரி கணக்குப்பிள்ளை என்ற பட்டத்துடன் அவருடனே ஒட்டிக்கொண்டு ராஜாவுக்கு வணக்கம் போடுபவர்களுக்கெல்லாம் பணத்தைக் கொடுத்தபடி பக்கவாத்தியம் போடுபவராக வலம் வருகிறார்.
சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான நிலங்களையெல்லாம் அந்த ஊரிில் உள்ள நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கே தானமாக சமஸ்தானம் வழங்கிவிட்டதால் ஊருக்கே நல்ல பிள்ளையாக சந்தோஷமாக உலவி வருகிறார் சிவகார்த்திகேயன்.
சிங்கப்பட்டிக்கு அருகாமையில் உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த பெரும் புள்ளி லால். அந்தப் பகுதியில் காற்றாடி அமைப்பதற்குத் தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கிக்கொடுத்தே பெரும்புள்ளியானவர் இவர். காற்றாடி ஆலை, ரியல் எஸ்டேட் வியாபாரம் என்று பணத்துக்குப் பஞ்சமில்லாமல் காத்தாடி கண்ணன் என்ற பட்டப் பெயருடன் பந்தாவாக இருக்கிறார்.
சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு இருக்கும் நல்ல பெயரையும், மக்களிடம் இருக்கும் செல்வாக்கையும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் லால், சிவகார்த்திகேயன் குடும்பத்தை வீழ்த்த சமயம் பார்த்துக் காத்திருக்கிறார்.
இரண்டு கிராமத்துக்கும் சொந்தமான சந்தையை நீதிமன்றம் யாரும் பயன்படு்த்தமுடியாதபடி பூட்டி சீல் வைத்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் தான் வளர்க்கும் புறாக்கள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருப்பதால் அவற்றைக் கண்டு பிடிக்க நண்பன் சூரியுடன் மாறு வேடத்தில் செல்கிறார். அப்போது அழகு மயிலாக வலம் வரும் சமந்தாவை பார்த்த அடுத்த நொடியே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
புளியம்பட்டியில் உள்ள பள்ளியில் பி.டி.ஆசிரயராக வேலை பார்ப்பர் சமந்தா. அந்தப் பள்ளியின் முதல்வர் மனோபாலா பள்ளி விழா ஒன்றுக்காக சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயனை அழைக்கிறார்.
விழாவுக்கு சிவகார்த்திகேயன் தன் இரட்டைக் குதிரை பூட்டிய சாரட்டில் செல்கிறார். சாரட் நிறுத்திய இடத்தில் சிறப்பு விருந்தினரின் வண்டி நிற்க வேண்டும் என்று சொல்லி குதிரை வண்டியை எடுக்கச் சொல்கிறார் சமந்தா. மனோபாலா வந்து சிவகார்த்திகேயன்தான் விழாக்கு வந்திருக்கும் வி.ஐ.பி. என்று சமந்தாவுக்குப் புரியவைக்கிறார்.
வேறு ஒரு ஆசிரியைக்குப் போக வேண்டிய சிறந்த ஆசிரியையுக்கான விருதை கோக்கு மாக்கு செய்து சமந்தாவுக்கு வழங்கும்படி செய்கிறார் சிவகார்த்திகேயன்.
பொது சந்தை பிரச்னை மீண்டும் தலைதூக்குகிறது. இரண்டு ஊருக்கும் இடையில் மல்யுத்தப்போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறும் ஊரைச் சேர்ந்தவர்களே சந்தையை நடத்தலாம் என்ற முடிவு செய்கிறார்கள் சிவகார்த்திகேயனும் காத்தாடி கண்ணனும்.
வெளியூரிலிருந்து மல்யுத்த வீரர்களைக் கொண்டுவந்து காத்தாடி கண்ணன் முறைதவறி நடந்து கொண்டாலும் இறுதில் சிவகார்த்திகேயனே வெற்றி பெறுகிறார். ஆயினும் சந்தையில் பாதிகடைகளை சிங்கப்பட்டிக்காரர்களும் மீதியை புளியப்பட்டிக்கார்களும் நடத்திக்கொள்ளலாம் என்று அறிவித்து நல்ல பெயர் எடுக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் சமந்தா காதல் கைகூடும் நேரத்தில் சமந்தா தன் மகள் என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்து வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் சென்று விடுகிறார் காத்தாடி கண்ணன். இதை சமாளித்து இறுதியில் சமந்தாவை சிவகார்த்திகேயன் எப்படி கரம் பிிடித்தார் என்பதுதான் சீமராஜா.
நீதிமன்றம் பூட்டி சீல் வைத்திருக்கும் சந்தையை இரண்டு தனி நபர்கள் மல்யுத்தப்போட்டி நடத்தி திறந்துவிட முடியுமா.. பள்ளி விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லும் ஒருவர் சிறந்த ஆசிரியைக்கான விருதை தன் காதலிக்கு கொடுத்து விட முடியுமா…யார் எங்கே தூக்கிச் சென்றாலும் வளர்த்தவர் வீட்டுக்குத்தானே புறா திரும்ப வரும்…இன்னும் இதுபோல் ஏராளமான கேள்விகள் எழத்தான் செய்யும். ஆனால் நகைச்சுவையை மட்டுமே கருத்தில் கொண்டு படத்தை உருவாக்கியிருப்பதால் இந்த லாஜிக்கையெல்லாம் மறந்துவிடலாம்.
படத்தின் பாராட்டுக்குரிய அம்சத்தில் முதலிடம் பெறுவது பாலசுப்ரமணியெம்மின் அற்புதமான ஒளிப்பதிவுதான். இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தை தன் கேமராவால் அப்படியே அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார். ஒளிப்பதிவுடன் போட்டி போடும் அளவுக்கு மிகச்சிறப்பாக அமைந்திருப்பது கலை இயக்குநர் முத்துராஜின் கைவண்ணம்.
இமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன. குறிப்பாக வரும் ஆனால் வராது பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் இனிமையாக இருக்கிறது.
படத்தின் இறுதிப்பகுதியில் வரும் கடம்பராஜா கதை பிரமிப்பூட்டும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக போர்க்களக் காட்சிகள் அபாரம். கிராபிக்ஸ் காட்சிகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன். இந்தப் பகுதியை மட்டும் தனியாக ஒரு முழுநீளத் திரைப்படமாக்கலாம். அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது கடம்பராஜாவின் கதை.
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டு மூன்றாவது படத்தை இயக்குநர் பொன்ராம் உருவாக்கிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. முதல் இரண்டு படங்களைப்போல் கதையில் இன்னும் சற்று கவனத்தைக் கூட்டியிருந்தால் சீமராஜாவின் ஆட்சி இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

Share.

Comments are closed.