வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதைப்போல் வெற்றி தோல்வியைக் காட்டிலும் நல்ல நோக்கத்துக்காக நாம் செய்யும் செயல்தான் முக்கியம் என்பதை விளக்க வந்திருக்கும் கருத்துள்ள படம்தான் செயல்.ஒரு வரியில் சொல்லும்போது நன்றாக இருக்கிறது இந்தக் கதை. மிகப் பெரிய வெற்றிப் படமாக்கியிருக்க வேண்டிய கதையை ஏனோ தானோவென்ற திரைக்கதையாலும் சாதாரண காட்சிகளாலும் சுமாரான படமாக்ககிவிட்டார் இயக்குநர் ரவி அப்புலு. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய அனைத்துப் பொறுப்புகளும் இவரே
பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த ஷாஜகான் படத்தை இயக்கயது இவர்தானாம். உண்மையில் இவர்தான் ஷாஜஹான் படத்தை இயக்கினாரா என்ற சந்தேகமே வருகிறது…. வீட்டு வாசலில் இட்லி சுட்டு விற்று வாழக்கை நடத்தும் ரேணுகா தன் மகன் ராஜன் தேஜேஸ்வரை மார்கெட்டுக்கு அனுப்பி மளிகை சாமான்கள் வாங்கிவரச் சொல்கிறார். மார்க்கெட்டில் மாமூல வசூலிக்கும் ரெளடிக்கும் தேஜெஸ்வருக்கும் எதிர்பாராமல் உரசல் ஏற்படுகிறது. பலர் பார்க்க ரெளடியை அடித்துப் புரட்டி (நிஜமாகவே) குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுப் போய்விடுகிறார்.
இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு ரெளடியிடம் இருந்த பயம் போய் அவனது “மாமூல்” வாழ்க்கை பாதிக்ப்படுகிறது. எனவே தன்னை அடித்த தேஜெஸ்வரை அதே மார்க்கெட்டில் வைத்து அடித்து கொலை செய்ய முயற்சிக்கிறான் ரெளடி. இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் செயல் படத்தின் கதை.
படத்தின் மிகப் பெரிய ஆறுதல் அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர் மற்றும் அறிமுக நாயகி தருஷி, ரெளடியாக நடித்த சமக் சந்திரா ஆகியோர்தான்.
ராஜன் தேஜேஸ்வர் அளவுக்கு சமீபகாலத்தில் நன்றாக நடனம், சண்டை ஆகியவற்றில் பயிற்சி பெற்ற அறிமுக நடிகர் யாரும் இல்லை என்று சொல்லலாம். ஓரளவு நன்றாக நடிக்கவும் செய்கிறார். நல்ல கதை வலுவான கதாபாத்திரம் என்று தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ்த் திரையுலகில் ஒரு ரவுண்ட வரலாம். அறிமுகநாயகனை வாழ்த்தி வரவேற்போம்.
ரெளடியாக நடித்த சமக் சந்திராவின் அல்லக்கைகளாக வரும் அப்ரண்டீஸ் ரெளடிகள் செய்யும் காமெடிகள் ரசிக்கும் ரகம்தான்.
தொழில் நுட்பக்கலைஞர்களைப் பொறுத்தவரை முதல் பாராட்டு ஒளிப்பதிவாளர் வி.இளையராஜா. சாலக்குடி நீர் வீழ்ச்சியும் இயற்கை எழில் கொஞ்சும் கேரளப் பகுதிகளும் நேரில் பார்த்தால்கூட இந்த அளவுக்ககு அழகாக இருக்குமா என்று தெரியவில்லை. இதே பெயரில் சாதனைகளை செய்திருக்கும் இசையமைப்பாளரைப் போலவும், கலை இயக்குநரைப்போலவும் ஒளிப்பதிவுத் துறையில் இவர் சாதனைகள் புரிவார் என்று நம்பலாம்.
சித்தார்த்விபினின் இசையில் உருவான பாடல்கள் மனதில் பதிந்து முணுமுணுக்க வைக்கும் அளவு சிறப்பாக இருக்கின்றன.
சற்றும் தொய்வில்லாத வகையில் விறுவிறுப்பாக படத்தைத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் ஆர்.நிர்மல்.
மொத்தத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச காமெடிகள் இல்லாத செயல் படத்தை குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.