ஜுங்கா – விமர்சனம்

0

 436 total views,  1 views today

தரமான நகைச்சுவையை தாராளமாக வழங்கினால் குறைந்த பட்ச வெற்றிக்கு உத்ரவாதம் என்பதை பல தமிழ்ப் படங்கள் நிரூபித்திருக்கின்றன. ஏதாவது ஒரு விஷயத்தை கிண்டல், நையாண்டி, பகடி என்று பல்வேறு பாணி வசனங்களினால் செய்யப்படுவது ஒரு வகை. தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன், கவுண்டமணி, விவேக், வடிவேலு போன்றவர்கள் இந்த முறையில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கோணங் கித்தனமான அசைவுகளின் மூலம் சிரிக்க வைப்பது இன்னொரு வகை. சந்திரபாபு, நாகேஷ், வடிவேலு போன்றவர் கள், வசனங்களால் மட்டுமன்றி உடலசைவுகளினாலும் நகைச்சுவையை உருவாக்கும் திறமையைப் பெற்றிருந்தார் கள். இவையெல்லாம் வழக்கமான நகைச்சுவை பாணிகள். இதை எல்லாம் உள்ளடக்கிய ‘பிளாக் காமெடி எனும் அவல நகைச்சுவை’ என்பது அபூர்வமாகவே வெளிப்படும். அந்த டைப்பில் விஜய் சேதுபதியை வைத்து  கஞ்சத்தனம்  கொண்ட’ டான்’ தனது மூதாதையர்களின் சொத்துக்களை காப்பாற்ற எப்படி போராடுகிறார் என்பதை பிளாக் காமெடித்தனமாக சொல்ல முயற்சி செய்து இருப்பதுதான் ஜுங்கா.  தமிழில் ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ படங்களை இயக்கிய கோகுல் இயக்கிய இப்படம் முழு காமெடியாக கொண்டு போக நினைத்து பாதி கிணறு தாண்டி இருக்கிறார்.

அதாவது ரஜினி ஸ்டைலில் பஸ் கண்டக்டராகப் பணிபுரியும் ஜுங்கா வின் தாத்தாவும், அப்பாவும், கொஞ்சூண்டு பிரபலம், கூடவே பிராபளமாக வாழ்ந்தவர்களாம் அந்த அப்பாவும் தாத்தாவும் சேர்ந்து தங்களது டம்மி டான் தனத்தால் ஒரு வசதியான செட்டி யாரிடம் விற்று இழந்த தங்களது பூர்வீக சொத்தான சினிமா பாரடைஸ் தியேட்டரை மீட்டெடுக்க, தன் தந்தையும் தாத்தாவும் செய்யாத டான் தனத்தை எல்லாம் செய்து காசு சம்பாதித்தும் தியேட்டரை மீட்க முடிவெடுக்கிறார் ஜுங்கா. இதையொட்டி பல தில்லாலங்கடி வேலை செய்து சம்பாதித்த ரூ.1 கோடி பணம் கொடுத்து சினிமா பாரடைஸ் தியேட்டர் முதலாளி செட்டியாரை (சுரேஷ் மேனனை) சந்தித்து தியேட்டரை தன் பெயருக்கு எழுதித் தரக் கேட்கிறார். ஆனால், அவர் மறுக்கிறார். இதனால் வெகுண்டெழும் விஜய் சேதுபதி பாரீஸில் வசிக்கும் செட்டியாரின் செல்ல மகள் சாயிஷாவை கடத்தி தன் காரியத்தை சாதிக்கும் நோக்கில் நண்பன் யோகி பாபுவுடன் பாரீஸ் போய் இறங்குகிறார்.

அங்கு இவர் சாயிஷாவை கடத்துவதற்கு முன்பே, ஒருபோதை மருந்து கடத்தல் கும்பல் சாயிஷாவை கடத்த அவர்களிடமிருந்து யாழினி – சாயிஷாவை ஜுங்கா – விஜய் சேதுபதி காப்பாற்றி கடத்தி, செட்டியாரை தன் வழிக்கு கொண்டு வந்து, தன் லட்சியமான தியேட்டரை கைப்பற்றினாரா? இல்லையா…? என்பது தான் மிச்ச ஜுங்கா. ஆரம்பத்தில் பணம் சேகரிப்பதற்காக டானாக உருவெடுக்கும் ஜூங்கா, அந்தப் பணத்தைச் சேமிக்கக் காட்டும் கஞ்சத்தனமும் அதனால் ஜூங்காவின் அடியாட்கள் படும் அவதியும் சிரிப்பை வர வைக்கிறது. அத்துடன் , சின்னச்சின்னதாக பல படங்களையும் நடிகர்களையும் ஸ்பூஃப் செய்வதும் ஜாலியாக இருக்கிறது. குறிப்பாக மணிமாறன், துரைசிங்கம், என்கவுன்ட்டர், சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனம் செய்யும் டான், 500 ரூபாய்க்கு கொலை செய்வதாகத் திட்டமிடும் டான் என படம் முழுக்க சுவாரஸ்யங்கள் நீள்கின்றன.

மேலும் ஒரு ஜீப்பை எடுத்துக் கொண்டு தப்பைத் தட்டிக்கேட்க புறப்படும் டான் குழு, வரும் வழியில் ஷேர் ஜீப்பாக மாறி பயணிகளிடம் காசு வசூல் செய்வதும், டிக்கெட் காசு தராமல் போகும் பயணிகளைக் கண்டறிந்து கறார் காட்டுவதும் படு காமெடிதான். அதிலும் டான் யூனியன் மீட்டிங்கில் பிஸ்கெட், போவோண்டா என ரொம்ப பொருத்தமாக காட்சி அமைத்துள்ளார்கள். இண்டர்வெல் வரை விஜய்சேதுபதி, யோகிபாபுவின் காமெடியை மட்டுமே வைத்து நகர்த்தியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் எல்லா காட்சிகளிலும் சிரிக்க முடியவில்லையென்றாலும், ஆங்காங்கே வெடித்து சிரிக்குமளவுக்கு சில காமெடிகள் இருப்பதால் ரிலீஃபாக இருந்தது.

ஆனால், செகண்ட் பார்ட்டில் படம் காமெடி டிராக்கிலிருந்து விலகி, கொஞ்சம் சீரியஸாக பயணிப்பதால் காமெடியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. அதோடு, இடையிடையே வரும் பாடல்களும் படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டையாகவே அமைந்துள்ளன. கூடவே படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கூட ‘இது’வே கிடையாது என்ற ரேஞ்சில் அதுவரை எட்டிக் கூட பார்க்காத பிரான்ஸ் போய் 20 மாடி கட்டிடத்தில் இருந்து ஒருவரை தூக்கி கீழே போட்டு கொலை செய்வதும், அநாட்டு போலீஸ் தலைமை அலுவலகத்திலேயே ஒருவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிப்பதும் ஓவர் கோகுல்.

விஜய் சேதுபதி படம் முழுக்க வழக்கம் போல் ஸ்கோர் செய்திருக்கிறார். கண்டக்டராக இருக்கும் போது டிக்கெட் எடுக்காதவர்களை மைண்ட் மேப்பில் கண்டறிந்து டிக்கெட் எடுக்க வைப்பது, அடியாள் தேடலில் சில ஆயிரங்கள் செலவு செய்த கோபத்தில் ரவுடிகளை மொத்தி எடுப்பது, சென்னையில் டான் ஆக ஃபார்ம் ஆவது, பெரிய டான்களை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்வது, காதலில் விழுவது, பாசமுள்ள மகனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுடன் பேரன் ஜுங்காவாக பேர் பாதி படத்திலும், தாத்தா லிங்கா, தந்தை ரங்காவாக இரண்டொரு சீன்களிலும் வெவ்வேறு கெட்-அப்களில் நவரசத்தையும் காட்டி வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. ஆனால் அடிக்கடி கத்தி பேசுவதால் கொஞ்சல் எரிசல் வருவதும் நிஜம். யோகி பாபுவைக் கண்டாலே தியேட்டர் கைதட்டுகிறது. அவர் பேசும் கவுண்ட்டர் வசனங்களுக்கு விசில் பறக்கிறது.

நாயகி சயிஷா படம் முழுக்க அழகோவியமாக வருகிறார். நடிக்க சரியாக வராது என்பதை உணர்ந்து மிக பிரமாதமாக நடனம் ஆடி அசத்துகிறார்.. டான் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம் போல் அட்டகாசமாக நடித்து பிரமாதப் படுத்துகிறார். ஆனால் டான் பாட்டியாக நடித்திருக்கும் விஜயா பாட்டி .. அடே அப்பா அவருக்காக கைத்தட்டிய கைகள் வலித்திருக்கும். நயந்து பம்முவது, பாய்வது என இருவித பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தும் நடிப்பு இரண்டாம் மனோரமா என்று சொல்ல வைத்தது.

ஒளிப்பதிவு செய்த டட்லி பனி படர்ந்த பாரீஸ் அழகை பர்ஃபக்டாக படம் பிடித்து அசத்தி இருக்கிRஆர். சித்தார்த் விபினின் இசையில், “ஏய் இப்படி சூடண்டி….”, “நார்த் மெட்ராஸுல… ஜொலிக்கிறியா கலாய்க்கிறாயா.”, “ஜுங்கா ஜுங்கா…”, “நீ யாரோ யாரோ….” உள்ளிட்ட பாடல்கள் ரசிகன் தாளம் போட்டு ரசிக்கும் ரகம். பின்னணி இசை ஓ.கே.

மொத்தத்தில் சிரிப்புப் பிரியர்களுக்கு ரொம்பப் பிடிக்கும் இந்த ஜூங்கா.

Share.

Comments are closed.