ஆண்டுதோறும் சுமார் இருநூறு படங்கள் திரைக்கு வந்தாலும், அவற்றில் சுமார் எண்பது சதவீதம் அறிமுக இயக்குநர்களின் படமாக இருப்பதை கவனிக்கலாம். அவர்களிலும் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாவது பட வாய்ப்பு கிடைப்தென்பது அரிதாகத்தான் அமைகிறது.
யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல், குறுப்படங்கள் இயக்குவதன் மூலமே பயற்சி பெற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு, வித்தியாசமான கதைக்கரு, வலுவான திரைக்கதை, என்று களம் இறங்கும் அறிமுக இயக்குநர்கள் வெற்றி பெறத் தவறுவதில்லை. நளன் குமாரசாமி (சூது கவ்வும்), கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா), பாலாஜி மோகன் (காதலில் சொதுப்புவது எப்படி) பாலாஜி தரணிதரன் (நடுவுலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்) என்று பல அறிமுக இயக்குநர்களை இதற்கு உதாரணம் காட்ட முடியும். இந்த வரிசையில் இணையப் போகிறவர்தான் ஷரண் குமார்.
யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லையே தவிர, நடிகராக சில படங்களில் நடித்த அனுபவம் இவருக்கு உண்டு. பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது படத்தில் நடிகராக அறிமுகமாகி, சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா (CSK), மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்த இவர், தற்போது பரத் நிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரில்லர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் ஷரண் குமாரை சந்தித்தபோது…
“நான் நடிகராக வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை, இயக்குனராவதுதான் என் கனவு. நான் ஒரு விளம்பர பட இயக்குனரிடம் உதவியாளராக சேர முடியுமா? என கேட்க சென்ற இடத்தில் தான் அது நிகழ்ந்தது. அவர்கள் நடிக்க ஆடிஷன் செய்ய சொன்னார்கள். மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு பிறகு, கூடிய சீக்கிரம் இயக்குனர் ஆவதன் அவசியத்தை உணர்ந்தேன். அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்” என்றார் நடிகர் ஷரண். ஷரண் ஓரிரண்டு குறும்படங்கள் இயக்கியதும், அதில் ‘டீ ஆர் காஃபி’ குறும்படம் நல்ல வரவேற்பை, பாராட்டுக்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
டார்க் திரில்லர் வகைதான் நான் இயக்கும் முதல் படம் என்று கூறிய ஷரண், மேலும் மேலும் தெரிவித்ததாவது, “பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார், ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் அவர் குடும்பத்தை அதிலிருந்து மீட்பது தான் கதை. இது ஒரு நாயகனை மையப்படுத்திய கதை கிடையாது, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். பரத்துக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து போனது, உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த கோகுல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் தரண் இசையமைக்க, ஜாக்சன் துரை, பர்மா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சன்னி (எடிட்டர்), கார்க்கி (பாடல்கள்), சாய்ராம் கிருஷ்ணன் (நிர்வாக தயாரிப்பு) கருந்தேள் ராஜேஷ் (திரைக்கதை ஆலோசகர் – சூது கவ்வும், இன்று நேற்று நாளை புகழ்) ஆகியோரும் படத்தில் பணி புரிகிறார்கள் என்றார் ஷரண் குமார்.
படத்தின் கதைக்கு மலைப்பகுதி பின்னணி தேவைப்படுவதால் கொடைக்கானலில் ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
கியூ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லக்கி சாஜெர் இப்படத்தைத்த தயாரிக்கிறார்.