753 total views, 1 views today
ஒட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கனிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு டெம்போ ஓட்டுநர்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டியின் நடுவே ஒரு யதார்த்தமான காதலையும் நுழைத்து பின்னப்பட்ட கதைதான் தங்கரதம்.
பதின்பருவத்திலிருக்கும் வெற்றிக்கு டெம்போ ஓட்டக் கற்றுக் கொடுத்து அவரை ஆளாக்குகிறார் அவரது சித்தப்பாவான ஆடுகளம் நரேன்.
மார்க்கெட்டுக்கு யாருடைய டெம்போவில் வரும் காய்கனிகள் முதலில் வந்து சேர்கிறது என்ற போட்டி நாயகன் வெற்றிக்கும் இணை நாயகன் செளந்தர்ராஜாவுக்கும் எப்போதும் இருக்கிறது.
இதற்கிடையே செளந்தராஜாவின் தங்கை அதிதி கிருஷ்ணாவும் வெற்றியும் காதலிக்கிறார்கள்.
ஒரு சந்தர்பத்தில் செளந்தர்ராஜாவின் டெம்போ தாமதமாக வந்ததால் பாதிக்கப்படும் வியாபாரி, தொடர்ந்து தனது சரக்குகளை அவரது வண்டியில் ஏற்ற மறுக்கிறார். இதனால் வெற்றிமீது செளந்தர்ராஜா கொண்டிருக்கும் கோபம் குரோதமாக மாறுகிறது. எனவே வெற்றியை கொல்லத் திட்டமிடுகிறார் செளந்தர்ராஜா.
இந்த சூழலில் தன் மகனுக்கு செளந்தர்ராஜாவின் தங்கை அதிதியை திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார் நரேன். தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தப்பாவிடம் தன் காதலை சொல்ல முடியாமலும், தன் காதலியை மறக்க முடியாமலும் தவிக்கிறார் வெற்றி.
இறுதியில் காதலர்கள் வெற்றி பெற்றார்களா… இல்லையா என்பதுதான் தங்கரதம் படத்தின் கதை.
எளிமையான மனிதர்களின் காதலையும், கோப தாபங்களையும் யதார்த்தமாக திரையில் சொன்னதற்காக இயக்குநர் பாலமுருகனை பாராட்டலாம்.
ஒட்டன் சத்திரம் காய்கனி சந்தையையும், கிராமத்து வீடுகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகப் படம் பிடித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் ஆர்.ஜேக்கப்பின் கேமரா.
காதலர்கள் சினிமாவுக்குச் செல்ல திட்டமிடுவது, கோயிலில் சந்திப்பது ஆகிய காட்சிகள் ரசிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன.
நான் கடவுள் ராஜேந்திரன் கேபிள் டி.வி. கனெக்ஷன் கொடுப்பவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன. இதைத் தவிர்த்திருக்கலாம்.