“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். வசனம், தாஸ் ராம்பாலா எழுதியிருக்கிறார்.
முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு “கேணி” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். “விக்ரம் வேதா”படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். “தளபதி” படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் எம்.ஏ. நிஷாத் கூறுகையில், “கேணி எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான். அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக “கேணி” ஏற்படுத்தும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும்” என்றார்.
நடிகர், நடிகையர்
நாசர், பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், ‘தலைவாசல்’ விஜய், பிளாக் பாண்டி மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு : நௌஷாத் ஷெரிப்
இசை : எம். ஜெயச்சந்திரன்
பின்னணி இசை : சாம் சி.எஸ்
படத்தொகுப்பு : ராஜாமுகமது
வசனம் : தாஸ் ராம்பாலா
பாடல்கள் : பழனிபாரதி
நடனம் : தினேஷ்
தயாரிப்பு
சஜீவ் பீ.கே – ஆன் சஜீவ்
கதை, திரைக்கதை, இயக்கம்
எம்.ஏ.நிஷாத்