‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ சார்பில் ஐ பி கார்த்திகேயன் மற்றும் கே ஆர் பிலிம்ஸ் சார்பில் சரவணன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘கிரகணம்’. அறிமுக இயக்குநர் இளன் இயக்கி இருக்கும் இந்த ‘கிரகணம்’ படத்தின் முதல் போஸ்டர் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளை பெற்று இருக்கின்றது. இயக்குநர் இளன் அடிப்படையில் ஒரு குறும்பட இயக்குநர். இவருடைய ‘வி – சித்திரம்’ குறும்படம் ரசிகர்களிடத்தில் பெரும் பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி, ‘லடாக் சர்வதேச திரைப்பட விழாவிலும்’ திரையிட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணா – ‘கயல்’ சந்திரன் என இரண்டு கதாநாயகர்களை உள்ளடக்கி இருக்கும் ‘கிரகணம்’ திரைப்படத்தில் கருணாகரன், கருணாஸ், ஜெயபிரகாஷ் மற்றும் ‘பிளாக்’ பாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் நந்தினி ராய் இந்த ‘கிரகணம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுமட்டுமின்றி, ஒளிப்பதிவாளர் சரவணன், இசையமைப்பாளர் சுந்திரமூர்த்தி மற்றும் படத்தொகுப்பாளர் மணி குமரன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை ‘கிரகணம்’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.
“என்னுடைய ‘வி – சித்திரம்’ குறும்படத்திற்கு ரசிகர்கள் அளித்த அமோக வரவேற்பை தொடர்ந்து நான் உருவாக்கி இருக்கும் முதல் முழு நீள திரைப்படம் ‘கிரகணம்’. இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் மூலம் எப்படி படத்தின் கதாபாத்திரங்களுக்குள் தொடர்பு ஏற்படுகின்றது என்பது தான் ‘கிரகணம்’ படத்தின் ஒரு வரி கதை. முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் ‘கிரகணம்’ படம் உருவாகி இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் நாங்கள் இந்த படத்தில் உள்ளடக்கி இருக்கின்றோம். எனக்கு முழு சுதந்திரத்தையும், ஆதரவையும் வழங்கிய என்னுடைய தயாரிப்பாளர்கள் ஐ பி கார்த்திகேயன் அவர்களுக்கும், சரவணன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘கிரகணம்’ படத்தின் இயக்குநர் இளன்.