ஒரு தரமான திரைப்படத்திற்கு பிரம்மாண்ட தயாரிப்பும், நட்சத்திர நடிகர் நடிகைகளும் அவசியம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு, எல்லா தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிக்கின்றன. ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ – ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குநர் ஸ்ரீ கணேஷை நேரில் சந்தித்த எம் எஸ் பாஸ்கர், அவருக்கு தங்க நகையை அணிவித்து, அவரை கௌரவப்படுத்தினார்.
“பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் என்னை இதுவரை பட்டாபி என்று அழைத்து வந்த ரசிகர்கள் பலர் , 8 தோட்டாக்கள் படத்தை பார்த்த பிறகு என்னை மூர்த்தி என்று அழைக்கின்றனர். தமிழ் திரையுலகின் புகழ், புது புது திறமையான இளம் படைப்பாளிகளால் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த பட்டியலில் தற்போது இணைந்து இருக்கிறார் ஸ்ரீ கணேஷ் என்பதை உறுதியகாவே நான் சொல்லுவேன். அவரோடு இணைந்து பணியாற்றியதில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய என்னுடைய தயாரிப்பளார்கள் வெள்ளை பாண்டியன் மற்றும் ஐ பி கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் எம் எஸ் பாஸ்கர்.