‘உச்சத்துல சிவா’ இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் ‘பணம் காய்க்கும் மரம்’
கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜேப்பி.. சமீபத்தில் வெளியான கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ படத்தை இயக்கியதோடு, அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அடுத்ததாக ‘பணம் காய்க்கும் மரம்’ என்கிற முழுநீள நகைச்சுவை படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்..
படத்தின் நாயகனாக அக்ச(ஷ)ய் நடிக்க, நாயகிகளாக அகல்யா, அன்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.. அத்துடன் கதாநாயகனின் அண்ணனாக இன்னொரு ஹீரோ போன்றே முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார் ஜேப்பி.. இவர்களுடன் ராஜ் குல்கர்ணி மற்றும் சோனு பாண்டே ஆகியோர் வில்லன்களாக நடிக்க, போஸ் வெங்கட், படவா கோபி, பாரதி கண்ணன், பாலு ஆனந்த், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்..
இந்தப்படத்தில் பிரபல இசையமைப்பாளரான எல்.வைத்தியநாதனின் மகன் L.V.கணேசன் இசையமைக்க, உச்சத்துல சிவா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஹார்முக் இதிலும் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவரான எடிட்டர் ஆனந்தலிங்க குமார் இந்தப்படத்தின் படத்தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். படத்தை தர்ஷ் ஷோ கம்பெனி தயாரிப்பில் A.ராமலிங்கம் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு ராதா ஜெயபிரகாஷ்.,
‘பணம் காய்க்கும் மரம்’ படம் பற்றியும் அதில் தான் நடித்தது ஏன் என்பது பற்றியும் இயக்குனர் ஜேப்பி என்ன சொல்கிறார்..? “உச்சத்துல சிவா படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் இந்த ‘பணம் காய்க்கும் மரம்’ படத்தின் தயாரிப்பாளர் A.ராமலிங்கம் வந்தார்.. அவர் வந்த சமயம் அந்தப்படத்தில் ஹீரோவின் நண்பனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்காக நான் மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தேன்.
படப்பிடிப்பில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டபோது மொத்த யூனிட்டும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.. அதை கவனித்த ‘பணம் காய்க்கும் மரம்’ படத்தின் தயாரிப்பாளர் ராமலிங்கம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னிடம் நம் படத்தில் ஹீரோவின் அண்ணனாக வரும் அந்த காமெடி கதாபாத்திரத்தில் நீங்களே நடித்துவிடுங்கள் என சொல்லிவிட்டார்.
சொன்னதில் உறுதியாக நின்று என்னை செயல்படுத்தவும் வைத்துவிட்டார். சந்தானம், சூரி போன்றவர்கள் ஏற்று நடிக்கவேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்கப்போகிறேன் என ஆரம்பத்தில் நினைத்தாலும், மொத்தப்படமும் முடிந்தபினர் முதல் பிரதியை பார்த்தபோது நிறைவாக செய்திருக்கிறேன் என்கிற நிம்மதி ஏற்பட்டது” என்கிறார் இயக்குனர் ஜேப்பி.
சமீபத்தில் வெளியான ‘உச்சத்துல சிவா’ படத்தில் இவரது ‘ஆண்டி ஹீரோ’ வேடம் பிரமாதமாக பேசப்பட்டதுபோல இந்த காமெடி கேரக்டரும் பிரபலமாகும் என்கிறார் ஜேப்பி நம்பிக்கையாக.