பரியேறும் பெருமாள் __ விமர்சனம்

0

 325 total views,  1 views today

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புரையோடிப்போயிருக்கும் ஆதிக்க ஜாதிகளின் அட்டூழியங்களை இந்த அளவு நெஞ்சைத் தொடும் வண்ணம் திரையில் பதிவு செய்த படம் இதற்கு முன்பும் வந்ததில்லை. இதன் பிறகும் இந்த அளவுக்கு வீரியத்துடன் வருமா என்பது சந்தேகமே. அதுவும் கத்தி அரிவாள் ரத்தம் இன்றி சாதித்துக் காட்டியிருக்கும் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதலில் ஒரு பாராட்டு.

ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இளைஞன் மகேந்திரன் சட்டக்கல்லூரியில் சேர்கிறார். ஆங்கில வழிக்கல்வி அவரை மிரட்சியடையச் செய்கிறது. அவரது அப்பாவித்தனமான கேள்விகளையும் யதார்த்தமான பேச்சுக்களையும் கண்ட, சகமாணவியான ஆனந்தி உதவ முன்வருகிறார்.
எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி நட்புடன் பழகும் இருவரையும், அதே கல்லூரியில் படிக்கும் ஆனந்தியின் ஒன்றுவிட்ட அண்ணனால் ஏற்றுக் கொள்ள முடியில்லை.
தன் அக்காவின் திருமணத்துக்கு உடன் படிக்கும் யாரையும் அழைக்காமல் மகேந்திரனை மட்டுமே அழைக்கிறார் ஆனந்தி.
நண்பனிடம் உடையை இரவல் வாங்கி அணிந்து கொண்டு திருமணத்துக்குச் செல்லும் மகேந்திரன், ஆனந்தியில் அண்ணன் மற்றும் நண்பர்களால் மிகக் கொடூரமான முறையில் அவமானப்படுத்தப்படுகிறார்.
இதன் பிறகு ஆனந்தியிடமிருந்து விலகிச் செல்ல முயல்கிறார் மகேந்திரன். ஆனால் காரணம் தெரியாமல் தவிக்கிறார் ஆனந்தி.
இதைத்தொடர்ந்து கல்லூரி பிரின்ஸிபாலை பார்க்க வரும் மகேந்திரனின் தந்தை வேட்டியைக் கழற்றி அசிங்கப்படுத்துகிறார் ஆனந்தியின் அண்ணன்.
ஒரு கட்டத்தில் மகேந்திரனைக் கொல்லவும் முடிவு செய்கிறது ஆதிக்க சக்திகள்.
மகேந்திரன் அவர்களிடமிருந்து மீண்டாரா ஆனந்தியுடனான நட்பு என்னவானது என்பது படத்தின் பின்பகுதி…
ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இளைஞர்கள் குளிக்கும் சிறு குட்டையில் சிறு நீர் கழித்து குரூர சந்தோஷமடையும் ஆதிக்க சக்திக்கார இளைஞர்களின் அட்டகாசத்துடன் படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. மகேந்திரன் ஆசையாக வளர்க்கும் நாயை ரயில் தண்டவாளத்தில் கட்டி வைத்து கொடூரமாகக் கொல்லும்போது அந்த அதிர்ச்சி அதிகரிக்கிறது. இன்னும் படம் வளர வளர அதிர்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இரு சக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் இருவரை சிலர் ட்யூப் லைட்டால் தாக்குவதுபோல் பாடல் காட்சியொன்றில் இடைச் செருகலாக வருகிறது. சம்மந்தமே இல்லாமல் இந்தக் காட்சி வருவதைப்போல் தோன்றினாலும் இயக்குநர் சொல்லாமல் சொல்லும் செய்தியும் இதில் இருக்கிறது.
படத்தின் நாயகன் பரியேறும் பெருமாளாக வரும் மகேந்திரன் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. நாயகியாக வரும் ஆனந்தியும் மகேந்திரனுடனான நட்பை கவித்துவமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மகேந்திரன்மீது தான் கொண்ட ஈடுபாட்டை அவரிடம் வெளிப்படுத்தும்போதுகூட, “எப்போதும் நான் உன்கூடவே இருக்கவேண்டும்… உங்க வீட்டில் உங்க அப்பா அம்மாவோட இருக்கணும்” என்று சொல்லும் காட்சி நெகிழ்ச்சியாக இருக்கிறது.
படத்தின் பலமான அம்சங்களில் முக்கியமானது சிரீதரின் ஒளிப்பதிவும், சந்தேஷ் நாராயணனின் இசையும்தான்.  படத்தை அழகாக்குகிறேன் என்று வண்ணங்களை வாரி இறைக்காமல் கதையின் மூடுக்கேற்ப காட்சிகளைப் படமாக்கி காவியமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான கருப்பி பாடல் நெஞ்சை கனக்கச் செய்கிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் கதாபாத்திரங்கள் எதுவுமின்றி மேஜை மீது இருக்கும் இரண்டு டீ டம்ளர்களும் அதற்கு நடுவில் இருக்கும் மல்லிகைப் பூவின் இதழ் ஒன்றும் நல்லதொரு கவிதையை வாசித்த அனுபவத்தைப் பார்வையாளனுக்குத் தருகிறது.
பிரதான பாத்திரத்திரங்களில் நடித்த மகேந்திரன் ஆனந்தி மட்டுமல்ல,  குணசித்ர நடிப்பில் மிளிரும் யோகிபாபு, ஆனந்தியின் தந்தையாக நடித்த மாரிமுத்து, மகேந்திரனின் தாய் தந்தை வேடங்களில் வாழ்ந்து காட்டியவர்கள், ஜாதியைப் பெருமையை காக்க கொலை செய்வதைக்கூட குலதெய்வத்துக்கு செய்யும் சேவையாக நினைக்கும் பெரியவர் கராத்தே வெங்கடேஷ் என்று பரியேறும் பெருமாள் படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களையும் உயர்ப்புடன் உலவச் செய்து முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
சிறந்த திரைப்படங்களுக்கும் திரைப்படக்கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கும் மத்திய அரசு, சிறந்த அறிமுக இயகுநருக்கும் ஒரு விருதை வழங்குகிறது. இந்த ஆண்டு அந்த விருது பரியேறும் பெருமாள் படத்தில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட வேண்டும்.

Share.

Comments are closed.