“ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட இந்த டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு அமோகமாக இருக்கின்றது” என்று கூறுகிறார் லதா ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும் கருதப்படும் ‘சத்யா மூவிஸ்’ நிறுவனம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ படத்தை, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ‘பாட்ஷா’, திரையுலக நட்சத்திரங்களையும் அதிகளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் ‘பாட்ஷா’ படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
இயக்குநர் பாலாஜி மோகன் கூறியதாவது: “இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். பாட்ஷா படத்தை கடந்த 1995 ஆம் ஆண்டு என்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து பார்த்த போது எனக்கு வயது 8. தற்போது மீண்டும் அவர்களோடு இணைந்து இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது”
இசையமைப்பாளர் அனிரூத் கூறியதாவது: “நம் வாழ்க்கையில் இதுவரை எவரும் கண்டிராத திரையரங்க அனுபவத்தை நமக்கு தருகின்ற திரைப்படம் இந்த டிஜிட்டல் பாட்ஷா”
நடிகர் தனுஷ் கூறியதாவது: “22 வருடங்களுக்கு முன் என்ன உற்சாகம் இருந்ததோ, அதே தான் இப்போதும் இருக்கின்றது. “நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்.. மீண்டும் ஒரு முறை தலைவரை காண இருக்கின்றோம்”
லதா ரஜினிகாந்த் கூறியதாவது: “இத்தனை வருடங்களுக்கு பிறகும் ரசிகர்களின் அதே அன்பை பார்க்கும் பொழுது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட இந்த டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு அமோகமாக இருக்கின்றது”