‘மனுசனா நீ’ படத்தின் திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது!

0

Loading

நான் ‘மனுசனா நீ’ என்ற மருத்துவத் துறை சம்பந்தமான கதையம்சமுள்ள தமிழ் திரைப்படம் எடுத்து கடந்த வாரம், பிப்ரவரி 16, 2018 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியிட்டேன்.

 வெளிநாட்டு உரிமை கொடுத்தால் இணையத்தில் வந்துவிடுகிறது என்று வெளிநாட்டு உரிமையைக் கொடுக்கவில்லை. தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. மேலும், வேறு மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடவில்லை.

 ஆனாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது. எனது பார்வைக்கு இந்தச் செய்தி வந்தவுடன், அந்த இணையத்திலிருந்து ஒரு பிரதி எடுத்து, தியேட்டருக்குப் படம் வெளியிடும் சேவை கம்பெனியான “கியூப் டிஜிட்டல் டெக்னாலஜி”க்குக் கொடுத்து FWM எனப்படும் ஃபாரன்சிக் வாட்டர்மார்க் முறையில் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி “எந்தத் திரையரங்கம், எத்தனை மணிக்கு கேமரா வைத்து பிரதி எடுக்கப்பட்டது என்று வழங்கக் கேட்டிருந்தேன். அவர்கள் முறைப்படி ஆய்வு செய்து கீழ்க்கண்ட தகவல்களைக் கொடுத்திருக்கின்றனர்:

 திரையரங்கத்தின் பெயர்: முருகன் திரையரங்கம்

ஊர்: கிருஷ்ணகிரி

எடுக்கப்பட்ட நாள்: 16.02.2018

எடுக்கப்பட்ட நேரம்: மாலை 07.05.39 லிருந்து 08.57.01 வரை.

 நான் கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தைத் தயாரித்து, மேலும் பல லட்சங்கள் செலவு செய்து சொந்தமாகப் படத்தை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்தேன். நல்லவிதமான எதிர்பார்ப்பு வந்து, படத்துக்குப் பல இடங்களிலிருந்தும் வியாபார வாய்ப்பு வந்த நேரத்தில் இவர்கள் செய்த செயலால் பெரிய அளவில் நஷ்டப்பட்டு, என்ன செய்வது என்று தெரியாத நிலையில் “அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு” – க்கு மனு கொடுத்து சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோர்மேல் புகார் கொடுத்தேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 எனக்கு இப்போது பல கோடி நஷ்டம். கேபிள் மூலமும், வெளிநாடுகளுக்கு சப்டைட்டில் போட்டு பிரித்து விற்பதன் மூலமும், பல இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் எனது எல்லா முயற்சிகளும் வீணாகி, ஏறக்குறைய 5 கோடி வரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

 அது மட்டுமல்லாமல், ஏறக்குறைய எல்லா தமிழ் படங்களையும் சில மூன்றாம் தர சமூக விரோதிகள் தொடர்ந்து திரையங்கங்களில் படமெடுத்து இணையத்தில் வெளியிடுவதால் வருடத்துக்கு தமிழ் சினிமா மட்டும் 500 – 600 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கிறது. இது, தயாரிப்பாளர்களைத் தெருவில் நிறுத்துவது மட்டுமல்லாமல், புதிதாய் திரைப்படம் தயாரிக்க யாரும் முன் வராத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 எனது இந்த முயற்சி அனைத்து தவறான திரையரங்கங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அருகிலிருக்கும் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் தியேட்டர் பைரஸி அறவே இல்லை. அந்த நிலையை நம் தமிழ் சினிமாவுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

 ஊடக நண்பர்கள் இந்தச் செய்தியை பெரிய அளவில் வெளியிட்டு நம் தமிழ் சினிமாவுக்கு பாதுகாப்பான, சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 இந்தக் கடிதத்துடன் கீழ்க்கண்ட நகல்களை இணைத்துள்ளேன்:

1.    “கியூப்” நிறுவனத்திடமிருந்து பெற்ற திரையரங்க விபரம்

2.    முருகன் திரையரங்க உரிமையாளர் மேல் போட்ட ‘முதல் தகவல் அறிக்கை’

 இப்படிக்கு,

 கஸாலி

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் 

 

Share.

Comments are closed.