“சர்ச்சை கதை எடுத்திருப்பதால் இதற்காக எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் அது பற்றி எனக்குப் பயமில்லை…” என்று ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.
சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’.
இந்தப் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ் ராஜ் , ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன் ராம் என்று பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். புதுமுக இயக்குநரான விக்கி படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று மதியம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, “இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ, என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல்தான் என்னிடம் வந்து சேர்ந்தார் .
ஒரு கட்டத்தில் நான் இனிமேல் படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி என்னிடம் இருந்த ஐந்து, ஆறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டேன்.
ஆனால் விக்கி மட்டும் போகாமல் ‘எனக்கு உங்கள்கூடவே இருந்தால் போதும். சம்பளமே வேண்டாம்’ என்று சொல்லி என் கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் ‘ஒன் மேன் ஆர்மி’ என்கிற வாழ்க்கைக் கதையைச் சொல்லும் புத்தகம்.
அந்தக் கதையைப் படித்து முடித்தபோது டிராபிக் ராமசாமியும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என்றெண்ணி வியந்து போனேன்.
மீண்டும் அது பற்றி விக்கியிடம் பேசும்போது, ‘அதைப் படமாக எடுக்கலாம்’ என்று விக்கி கூறினார். என்னால் அதனை மறுக்க முடியவில்லை.
நான் கடந்த 45 ஆண்டுகளில் 69 படங்களை இயக்கிவிட்டேன். நான் இந்த உலகை விட்டுச் செல்லும்போது எதை விட்டுச் செல்லப் போகிறேன். எனக்குப் பெருமையான விஷயமாக என்ன அடையாளத்தை வைத்துவிட்டுப் போகிறேன் என்பதை யோசித்தேன். அப்படி யோசித்தபோது இந்தப் படத்தைத் தயாரித்து, நடித்தால் இதுதான் எனது அடையாளமாக காலாகாலத்துக்கும் இந்தத் தமிழ்த் திரையுலகில் நீடித்து நிற்கும் என நினைத்துதான் இந்தப் படத்தைத் தயாரித்து, நடிக்க ஒத்துக் கொண்டேன்.
படத்தின் துவக்கத்திற்கு பிறகு நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள். எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார். தமிழில் வெளிவந்த வெற்றி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக ரோகிணி எனது இயக்கத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவரை வைத்து நான் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இப்போதுதான் முதல்முறையாக அவருக்கு ஜோடியாகவே நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள். சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ் ராஜ். இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.
இப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும். இது சர்ச்சைகள் கொண்ட கதைதான் என்பதை மறுப்பதற்கில்லை. இது பற்றி எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் எனக்குப் பயமில்லை.
ஏனென்றால் என் முதல் படமான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான். எம்.ஜிஆர். ஆட்சிக் காலத்தில் கலைஞர் ஒரு முறை கைது செய்யப்பட்டபோது அதற்கடுத்த நாளிலேயே ‘நீதிக்குத் தண்டனை’ என்ற படத்துக்கு பூஜை போட்டு படத்தை உருவாக்கி அதே வருடத்திலேயே வெளியிட்டேன். இதற்காகவே ஒரு தடவை எம்.ஜி.ஆர்.என்னை தோட்டத்துக்கு கூப்பிட்டார். நான்தான் போகவில்லை..
இப்போது இந்தப் படத்திற்காக எந்த மாதிரியான மிரட்டல்கள் வந்தாலும், அதனை சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன்…” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் விக்கி, நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகைகள் ரோகிணி, உபாசனா, ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.