யுவன்ஷங்கர் ராஜா திரையுலகில் அடியெடுத்து வைத்து இன்றுடன் (27.02.2017) இருபது ஆண்டு காலம் நிறைவு பெறுகின்றது. அவருடைய இசை, பல நட்சத்திரங்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம். புகழின் உச்சியில் இருக்கும் யுவன்ஷங்கர் ராஜா, இந்த மகிழ்ச்சிகரமான நாளை எப்போதும் போல, எளிமையாக கொண்டாடினார்.
“நான் இப்போது இந்த நிலையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னுடைய ரசிகர்களின் அன்பும், இசை பிரியர்களின் ஆதரவும் தான். அவர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இருபது வருடங்கள் நிறைவு பெற்றாலும், நேற்று தான் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது போல நான் உணருகின்றேன். இந்த இருபது வருட காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஏற்றங்களும் இறக்கங்களும், என்னை எந்த விதத்திலும் பின்னடைய செய்யவில்லை. இந்த வருடங்களின் எண்ணிக்கையை நான் இசையமைத்த திரைப்படங்கள் மூலமாக தான் கணக்கிடப்பட முடியும். ஆனால் நான் ஒரு பிறவி இசை கலைஞன் என்பது இன்றும், என்றும், என்றென்றும் நீடித்து இருக்கும். இந்த தருணத்தில் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நட்சத்திரங்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகள் தெரிவித்து கொள்கின்றேன். இசை துறையில் நான் அதிக கவனம் செலுத்துவதற்கு மிக முக்கிய காரணம் என்னுடைய தந்தை தான். அவருக்கு நான் எப்போதும் கடமை பட்டிருக்கிறேன். இந்த இருபதாவது வருடத்தில் நான் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்து இருப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். விரைவில் என்னுடைய அடுத்த படத்தை பற்றிய விவரங்களை நான் தெரிவிப்பேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் யுவன்ஷங்கர் ராஜா.