ராட்சசன் கதையை கேட்கும் போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடின – ஜிப்ரான்

0

 222 total views,  1 views today

ஒரு சிறப்பான திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகும்போது, ஒட்டு மொத்த குழுவிடமும் பொதுவாக நிலவுகின்ற ஒரு நம்பிக்கை மற்றும் திருப்தியை நீங்கள் காணலாம். குறிப்பாக, தொழில்நுட்ப கலைஞர்களிடமும், இசையமைப்பாளர்களிடமும் இதை அதிகமாகவே காண முடியும். இசையமைப்பாளர் தான் தன் இசையால் படத்துக்கு முழு உயிரை கொடுக்கிறார். எப்போதும் அமைதியுடன் காணப்படும் இசையமைப்பாளர் ஜிப்ரான், அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ‘ராட்சசன்’ படத்தின் மீது மிகுந்த  உற்சாகத்துடன் இருக்கிறார்.
 
ராட்சசன் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஜிப்ரானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பாராட்டி வருகிறார்கள். இது குறித்து ஜிப்ரான் கூறும்போது, “எந்த ஒரு படத்திலும் பாராட்டு எந்த அளவுக்கு வருகிறதோ, அந்த அளவுக்கு பொறுப்பும் என் தோள்களில் வந்து சேர்கிறது. மக்கள் என் பின்னணி இசையை அதிகம் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதனாலேயே படத்தை தேர்வு செய்வதில் நான் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாகி விட்டது. உண்மையில், எந்த ஒரு இயக்குனரும் எனக்கு ஒரு கதை சொல்லும்போது, அதில் பின்னணி இசைக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனிப்பேன். சில நேரங்களில், அது என் கருத்துக்கு ஆதரவாகவும், ஒரு சில நேரங்களில் முரண்பாடாகவும் இருந்திருக்கின்றன. ஆனால், ‘ராட்சசன்’ கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது. கதையை கேட்கும்போது பின்னணி இசையில் நிறைய சவால்கள் இருப்பதை நான் உணர்ந்தேன்” என்றார்.
 
ராட்சசன் படத்தில் பணிபுரியும்போது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை பற்றி ஜிப்ரான் கூறும்போது, “பின்னணி இசையின் வழக்கமான கூறுகளை கொண்டு இசையமைப்பதை தாண்டி, நிறைய இடங்களில் ‘இசையுடன் ஒலியை’ கலந்து தர வேண்டி இருந்தது. கதை சொல்லல் மற்றும் பிவி சங்கரின் சிறப்பான காட்சியமைப்புகளுக்கு  இசை மூலம் சிறந்த விஷயங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். நடிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவருமே புதிய பரிமாணம் எடுத்திருக்கிறார்கள். ஒரு ரசிகனாக என்னை கவர்ந்தனர். இந்த படத்தில் எல்லோரும் திறமையாளர்கள். அதனால் நானும் மிகச்சிறப்பாக பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு மற்றும் அவர்களின்  கருத்துகளை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார். 
 
விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. ஜி.டில்லிபாபு (ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி) மற்றும் ஆர்.ஸ்ரீதர் (ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்) ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
 
Share.

Comments are closed.