ராட்சசன் – திரைப்பட விமர்சனம்

0

 374 total views,  1 views today

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களின் அலுவலகத்திற்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் விஷ்ணு விஷால். சந்திக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ‘இப்போ; அப்போ’ என்று அவரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவருடைய தந்தை போலீஸ் வேலையில் இருந்தபோதே இறந்து போனதால் கருணையின் அடிப்படையில் ஒரு அரசு வேலை அந்தக் குடும்பத்திற்கு உண்டு. அதை ஏற்றுக்கொள்ளும்படி விஷ்ணு விஷாலின் அம்மா அவரை வற்புறுத்துகிறார்.

விஷ்ணுவுக்கோ கோடம்பாக்கத்தின் கோட்டையைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை. மீண்டும், மீண்டும் படையெடுக்கிறார். முடியவில்லை. கடைசியாக ஒரு தயாரிப்பாளர் ‘நாம படம் பண்றோம் தம்பி’ என்று வாக்குறுதி கொடுக்கிறார். வழக்கம்போல் இந்த வாய்புப்பும் கை நழுவுவவே, வேறு வழியின்றி இனி அம்மா சொல்படி போலீஸ் வேலைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறார் விஷ்ணு. சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார். அவருடைய அக்காள் கணவரான முனீஸ்காந்த் ஏற்கெனவே இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அதே ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக போஸ்டிங் வாங்கி வருகிறார் விஷ்ணு.

அதே நேரம் சென்னையில் பள்ளி மாணவிகள், சிலர் கடத்தப்படுகிறார்கள். மறுநாள் அவர்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டு அவர்களுடைய உடல்கள் கிடைக்கின்றன.

பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மீடியாக்கள் கதறுகின்றன. போலீஸ் விசாரணையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்போது தனது கதைத் திறனின் அடிப்படையில் விஷ்ணு இந்த வழக்கை இந்தக் கோணத்தில் விசாரிக்கலாம் என்று அஸிஸ்டெண்ட் கமிஷனரான சூசன் ஜார்ஜிடம் சொல்கிறார்.

ஆனால் சூசனோ அதை உதாசீனப்படுத்தி அவரை அவமானப்படுத்துகிறார். இரண்டாவது மாணவியும் படுகொலை செய்யப்பட இப்போது கமிஷனரே நேரில் வந்து விசாரிக்கிறார். “இந்தக் கொலைகளை செய்பவன் நிச்சயமாக ஒரு மன நோயாளியாகத்தான் இருப்பான். இரண்டாவது பெண்ணின் மரணத்தை வெளியில் சொல்லாமல் மறைத்து வைப்போம். அப்போது கொலைகாரன் தடுமாறுவான். ஏன் அந்தக் கொலை சம்பவம் வெளியில் வரவில்லை. என்னாச்சு என்று யோசிப்பான். அந்த நேரத்தில் ஏதாவது தவறு செய்வான். அப்போது அவனை நாம் எளிதாகப் பிடிக்கலாம்…” என்று கமிஷனிரடம் சொல்கிறார் விஷ்ணு.

கமிஷனரும் இதற்கு ஒப்புக் கொள்கிறார். இடையில் முனீஸ்காந்தின் பெண் வேறொரு பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்கிறாள். அந்த வகுப்பின் கணக்கு ஆசிரியர் சாடிஸ்ட்டாக இருக்கிறான். அவன் மாணவிகளை மதிப்பெண்களைக் காட்டி மிரட்டி அவர்களை தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துகிறான்.

3-வதாகவும் ஒரு மாணவி காணாமல் போகிறார். இவர் ஏறிச் சென்ற ஆட்டோவை அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் அமலாபால் பார்த்திருக்கிறார். அவருக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையில் முன் பழக்கம் உண்டு என்பதால் இது பற்றி அமலா பாலிடம் விசாரிக்கிறார். தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் அமலாபால், ஒரு கட்டத்தில் விஷ்ணு மீது நல்லெண்ணம் வந்து அந்த வழக்குக்கு உதவுகிறார்.

அந்த மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோவில் வித்தியாசமான முறையில் ஒரு நட்சத்திரம் வரையப்பட்டிருப்பதை அமலா பால் ஞாபகப்படுத்திச் சொல்ல.. அந்த ஆட்டோவை எதேச்சையாக கண்டறிகிறார் விஷ்ணு. ஆட்டோ டிரைவரை ஸ்டேஷனில் வைத்து விசாரிக்க மாணவியை அழைத்துச் சென்றது அந்த சைக்கோ பள்ளி வாத்தியார் என்பது தெரிகிறது.

விசாரணைக்குப் பிறகு அந்த சைக்கோ கொலைகாரன் வாத்தியார் இல்லை என்பது தெரிய வர.. வேறு வழிகளில் யோசிக்கத் துவங்குகிறார் விஷ்ணு. இந்த நேரத்தில் முனீஸ்காந்தின் மகளையே கடத்திக் கொலை செய்துவிடுகிறான் கொலைகாரன்.

தான் நடத்திய தனிப்பட்ட விசாரணையின் ஒரு கட்டத்தில் கடத்தப்பட்ட மாணவிகளெல்லாம் அந்தந்த பள்ளிகளின் ஆண்டு விழா முடிந்த பிறகே கடத்தப்பட்டிருக்கும் ஒற்றுமையை கண்டறிகிறார் விஷ்ணு.

இதை மேலும் நுணுக்கமாக விசாரிக்கும்போது ஆண்டு விழா கொண்டாடிய அனைத்து பள்ளிகளிலும் ஒரு பெண்மணி மேஜிக் ஷோ நடத்தியிருப்பது தெரிய வருகிறது. அந்தப் பெண்மணியைத் தேடுகிறார் விஷ்ணு. அவருடைய புகைப்படத்தை வைத்துப் பார்க்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்னால் கொடைக்கானலில் ஒரு மாணவியைக் கொலை செய்ததாக தனது மகனுடன் கைது செய்யப்பட்ட ஒரு பெண்மணியின் ஒத்த உருவமாக இந்த மேஜிக் பெண்மணி தெரிகிறார்.

இவர்தான் அந்த சைக்கோ கில்லராக இருப்பார் என்று நினைத்து விஷ்ணு விஷால் தனது போலீஸ் நண்பர்களை வைத்து தேடுகிறார்.

கடைசியில் என்ன ஆனது..? சைக்கோ கொலைகாரன் யார்..? அவனுடைய பின்னணி என்ன..? ஏன் இந்தக் கொலைகள் இப்படி நடக்கின்றன..? விஷ்ணு விஷால் கண்டறிந்தாரா இல்லையா என்பதுதான் இந்த சுவாரஸ்யமான திகில், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தின் திரைக்கதை.

விஷ்ணு விஷாலுக்கு இதுவொரு முக்கியமான படம். ஒரு திரைப்பட இயக்குநருக்குரிய ஆய்வு செய்யும் மனப்பான்மையோடு வழக்கை அணுகும் தன்மையுடன் இருக்கும் அவரது கேரக்டர் சுவையானது. முதல் நாள் ஸ்டேஷனுக்கு வந்த உடனேயே ஒரு அக்யூஸுட்டுக்கு லத்தி மரியாதை கொடுக்கும் முயற்சியில் ஈடுபடும்போது சினிமா ஷூட்டிங்கில் தான் பேசியதும், செய்து காட்டியதும் அவருக்கு நினைவுக்கு வருவது சாலப் பொருத்தம்.

அமலா பாலுடனான முதல் சந்திப்பின் இறுதியில் பல்பு வாங்கும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள் இருவரும். வழக்கிற்குள் வந்தவுடன் அந்தக் குற்றவாளியை கண்டறிந்தே தீர வேண்டும் என்கிற வெறியில் இயங்கும் விஷ்ணு விஷாலின் அடுத்தடுத்த ஆக்சன்கள்தான் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன.

வீட்டில் இருந்து தப்பித்து காரில் செல்லும் கொலையாளியை விஷ்ணு விஷால் துரத்திச் செல்லும் காட்சிகளும், அடுத்தடுத்த டிவிஸ்ட்டுகளும் படம் பார்ப்போரை நெஞ்சாங்கூட்டில் ‘திக்’ என்ற உணர்வுடன் கை வைக்க வைத்திருக்கிறது.

அமலாபால் படத்திற்குத் தேவையான ஒரு நாயகிக்கான லுக்கைக் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான். அதிகமாக நடிப்புக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் படத்தின் வேகத்திற்கு டிவிஸ்ட்டாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

காது கேளாதோர் பயன்படுத்தும் ஹியரிங் எய்டில் இருக்கும் ஒரு சில வசதிகளைக்கூட இயக்குநர் திரைக்கதைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சரவணன்தான் உண்மையில் பயமுறுத்தியிருக்கிறார். அவருடைய கொடைக்கானல் எபிசோட் மிகவும் சோகமயமானது. மாணவப் பருவத்தில் புறக்கணிப்பும், கேலியும், கிண்டலும் மிகக் கொடூரமானது. அது மனதை திசை மாற்றினால் இப்படித்தான் பேரழிவைத் தரும் என்பதை நாசூக்காகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சண்டை காட்சிகள் மட்டுமே வில்லனுக்கு அமர்க்களமாக இருப்பதால் நடிப்புக்கு மிகப் பெரிதாக வாய்ப்பில்லை. ஆனாலும் பயமுறுத்தியிருக்கிறார்.

இரண்டே பாடல்கள். அதிலும் கதையோடு, கதையை நகர்த்தியபடியே செல்வதால் போரடிக்கவில்லை. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஜிப்ரான். தடதட காட்சிகளிலும், படபட காட்சிகளிலும் பார்வையாளர்களுக்கு திக், திக் உணர்வை கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர். கடைசிவரையிலும் படத்தின் ஓட்டத்திற்கு மிக்க உறுதுணை பின்னணி இசைதான் என்பதில் ஐயமில்லை.

ஒளிப்பதிவு இயக்குநரான பி.வி.ஷங்கரும், தன் பங்குக்கு நம்மை எப்படியெல்லாம் பயமுறுத்த முடியுமோ.. அப்படி பயமுறுத்தியிருக்கிறார். கொலை செய்யப்பட்ட மாணவிகளின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது எந்தக் கோணத்தில் பார்த்தால் கொடூரமாகத் தெரியுமோ அப்படியே ஷூட் செய்திருக்கிறார்கள். வில்லனின் இருப்பிடத்தில் நடக்கும் சண்டை காட்சிகள், தேடுதல் காட்சிகளிலெல்லாம் கேமிராவே அதிக பயமுறுத்தலைச் செய்திருக்கிறது.

இத்தனை இறுக்கமான இயக்கத்திற்கு உற்ற துணையால் கொடுத்ததையெல்லாம் கச்சிதமாக நறுக்கித் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ்.

ஒட்டு மொத்தமாய் படம் ஒரு அதிவேக திரில்லர் படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறான் இந்த ராட்சசன்.

Share.

Comments are closed.