வட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஏன்? என்ன லட்சியம்?

0

 236 total views,  1 views today

டல்லாஸ்: தமிழ் நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்களில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது தெரிந்தது. முதன் முதலாக வட அமெரிக்காவில் ரஜினிகாந்த் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.
அதென்ன அமெரிக்காவில் ரஜினி பேரவை? இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொணடு ஏன் அமெரிக்காவில் ரஜினிகாந்துக்கு பேரவை தொடங்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, வரிசையாக காரணங்களை அடுக்கினார்கள்.
இதுகுறித்து டல்லாஸ் நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகரும், இந்த அமைப்பின் அமைப்பாளருமான இர தினகர் கூறுகையில், “வட அமெரிக்காவில் வசிக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின்  அரசியலுக்கும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் லட்சியம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு இன மக்களின் உதவியுடன் பல்வேறு திட்டங்களையும், நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறார். அது போல் ரஜினி தமிழக முதல்வர் ஆனதும் அமெரிக்காவிலிருந்து திட்டங்களையும் தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்ல ரஜினிக்கு உறுதுணையாக இருக்கவும் இந்த பேரவை செயல்படும்.
புது தொழில் நுட்பங்கள் அமெரிக்காவில்தான் அறிமுகமாகின்றன. அதில் பணிபுரியும் ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின் ஆட்சியில் தமிழகத்திற்கு புதிய தொழில் நுட்பங்கள் கிடைக்கச் செய்ய உறுதுணையாக செயல்படுவோம்,” என்றார்.
இந்த அமைப்பைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்களான ரஜினி ராஜா, அன்புடன் ரவி, சீனிவாசன் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் கூறுகையில், “பெருந்தலைவர் காமராஜர் வழியில், தமிழக விவசாயிகளுக்காக நதி நீர் இணைப்பு உட்பட, நீர்  ஆதாரத்தை பெருக்குவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை களைவது, தமிழ் மொழியை பேணிக்காப்பது, தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்டுவது, தமிழகத்தில் தொழில் வளம், கல்வித்தரம் இரண்டையும் உயர்த்துவது, புதிய தொழில் நுட்பங்களில் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு உட்பட பல தமிழக நலத் திட்டங்களை ரஜினி நிறைவேற்றுவார்,” என்றனர்.
அமெரிக்காவில் வசித்தாலும்,  ராமருக்கு அணில் போல், ரஜினியின் ஆட்சியில் , அவருக்கு உறுதுணையாக செயல்படப் போவதாகவும் வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த பேரவையினர் கூறியுள்ளார்கள்.
எம்ஜிஆருக்கு வெளிநாட்டில் மன்றம் இருந்ததாக சொல்லப்பட்டதுண்டு. ரஜினிக்கு அமெரிக்காவில் பேரவை அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவில் இருந்தாலும் ரஜினி தமிழ் நாட்டு முதல்வர் ஆக வேண்டும், தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Share.

Comments are closed.