ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி – சாயீஷா சைகல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் ‘வனமகன்’. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், அவரது ஐம்பதாவது படமாக வெளிவந்திருக்கும் ‘வனமகன்’ படம் என்ன சொல்ல வருகிறது?
கதைப்படி, கோடீஸ்வர பெண்ணான நாயகி சாயீஷா, தனது நண்பர்களுடன் அந்தமான் நிக்கோபர் தீவுக்கு சுற்றுலா செல்கிறார். அப்போது அங்கு எதிர்பாராமல் ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் பழங்குடி இனத்தவரான நாயகன் ஜெயம் ரவிக்கு அடிப்பட, அவரை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கடத்தி வந்து சென்னையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைக்கின்றனர்.
தன் இனத்தையும், ஊரையும் விட்டுவந்த ஜெயம் ரவி பிரம்மை பிடித்தவர் போல் எதிர்படும் எல்லோரையும், எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறார். சாயீஷா வீட்டில் அவர் செய்யும் சேட்டை நம் வயிறுகளில் கிச்சு கிச்சு மூட்டுகிறது, அதிலும் குறிப்பாக தம்பி ராமையாவிற்கும் ஜெயம் ரவிக்கும் இடையேயான காம்பினேஷன் அருமை.
நாம் இப்போது பின்பற்றி வரும் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள் உள்ளிட்டவற்றை சாயீஷா, ஜெயம் ரவிக்கு சொல்லிக்கொடுக்க அவரும் பவ்யமாக கற்றுக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் சாயீஷாவுக்கு அவரை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை படம் பிடித்து காட்டுகிறார் ஜெயம் ரவி.
கடைசியில் இருவரும் காதல் வயப்படுத்தயாராகும் நேரத்தில் ஜெயம் ரவியை அந்த மான் வனத்துறை அதிகாரிகள் தூக்கிக் கொண்டு செல்கின்றனர். சாயீஷாவும் அவரைத் தேடி அந்தமான் போகிறார். அங்கு செல்லும் அவர் ஜெயம் ரவியை தேடி கண்டுப்பிடித்தாரா.? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா..? தன் இனத்தை பிரச்சினையில் இருந்து ஜெயம் ரவி காப்பாற்றினாரா? என்பது தான் ‘வனமகன்’ படத்தின் கதையும் களமும்.
காட்டுவாசியாக ஜெயம் ரவி நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். தனக்கு கிடைத்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதனை முழுமையாக செய்துள்ளார். கருமையான நிறம், பேசுவதற்கு வசனங்களே இல்லை, பெரிய அளவிலான காஷ்டியும் இல்லை, இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்து நடித்திருக்கிறார். அதற்காகவே ஜெயம் ரவியை பாராட்ட வேண்டும். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அட்டகாசப்படுத்தியுள்ளார் ஜெயம் ரவி.
அறிமுக நாயகியான சாயீஷா சைகலிடம் அழகும் நடிப்புத் திறமையும் கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக நடனத்தில் பின்னிபெடலெடுக்கிறார் அம்மணி. ‘டேம் டேம்’ பாடலுக்கு அவர் போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்து திரையரங்குகளில் எல்லோரும் புருவத்தை உயர்த்துகின்றனர் என்பது தான் உண்மை. சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயமாக தமிழ் சினிமா உலகில் இவருக்கு பெரிய எதிர்காலம் உண்டு.
நடிகர் பிரகாஷ்ராஜ் வழக்கம் போல தனது முதிர்ச்சியான நடிப்பால் கவர்கிறார். தம்பி ராமையா பல இடங்களில் நகைச்சுவையால் தன்னை நிரூபிக்கிறார். வேல ராமமூர்த்தி, சண்முகராஜா, வருண் ஆகியோரும் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
ஒளிப்பதிவாளர் திரு படத்தின் கதைக்களத்திற்குகேற்ப படம் முழுக்க பச்சை பசேலென்று திரையில் காட்டி நம்மை அசத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் நுட்பமான சில காட்சியமைப்பை கையாண்டுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ‘டேம் டேம்’ பாடல் ரசிக்க வைக்கிறது. யம்மா அழகம்மா, பச்சை உடுத்திய காடு பாடல்களை காட்சிப்படுத்திய விதம் அருமை. பின்னணி இசையை படத்திற்கு ஏற்றார் போல் பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் கதையும், திரைக்கதை அமைப்பும் மிக பிரமாதமாக உள்ளது. கார்ப்பரேட் சதித் திட்டம், காட்டின் வளம், பெருமுதலாளிகளின் நடவடிக்கை, வனமக்களின் மாசு மருவற்ற தூய உலகம் ஆகியவற்றை இந்த வனமகன் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் விஜய். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.