இரட்டை கதாநாயகர்களை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்தாலும், தன்னுடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக இருந்தால், அதை உற்சாகத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது கெளதம் கார்த்திக்கோடு இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘7C’s என்டர்டைன்மெண்ட்’ மற்றும் ‘அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்குகிறார். இரட்டை கதாநாயகர்களை கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஒரு கதாநாயகனாக கெளதம் கார்த்திகை முடிவு செய்த படக்குழுவினர், மற்றொரு கதாநாயகனுக்கான தேர்வில் மும்மரமாக ஈடுபட்டு வந்தது. தற்போது அந்த மற்றொரு கதாநாயகனாக விஜய் சேதுபதியை முடிவு செய்துள்ளனர். தயாரிப்பாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில், விஜய் சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் ஆகிய இரண்டு கதாநாயகர்களும் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை பற்றிய கருத்துக்களை பரிமாறி கொண்டனர்.
“ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்களை கொண்டு உருவாகும் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் ரொம்பவே கம்மி என்று மக்கள் சொல்லி இருப்பதை நான் கேட்டு இருக்கின்றேன். ஆனால் விஜய் சேதுபதி போன்ற கதாநாயகர்களின் வருகையால், அந்த கூற்று தமிழ் திரையுலகில் இருந்து மறைந்து கொண்டு வருகிறது. தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த, சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து வரும் விஜய் சேதுபதி, இரண்டு கதாநாயகர்கள் உடைய கதைகளையும் ஆர்வத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வருவது, அவரின் உறுதியான நம்பிக்கையை உணர்த்துகிறது. இந்த படத்தின் கதையை நான் அவரிடம் கூறிய அடுத்த கணமே, அவருடைய கதாபாத்திரத்தில் அவர் ஆழமாக மூழ்க தொடங்கி விட்டார். இந்த படத்தில் அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இருக்கும். எங்கள் படத்தின் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று துவங்கினோம். படத்தின் தலைப்பை ஒரு நல்ல நாளாக பார்த்து தெரிவிப்போம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.