விஷால் தன் தலைக்குப் பின் ஒளிவட்டம் ஒன்று சுழல்வதாக நினைத்துக் கொண்டு எப்படி சர்வாதிகாரப்போக்குடன் செயல்படுகிறார் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோமல்லவா… அதற்கு சமீபத்திய சாட்சி இது.
காலா படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்று சில கன்னட அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறிவித்தபின் தன் நாட்டாமைத்தனத்தை நிரூபிக்க விஷால் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது கர்நாடக பிலிம் சேம்பரிடம் நேற்று பேசியிருப்பதாகவும், இன்று மாலை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் கூறுகிறார் விஷால்.
நட்டுக்கிட்டு நின்னாலும் என்னதான் தம் கட்டினாலும் கர்நாடக அமைப்புக்கள் காலாவை திரையிடக்கூடாது என்ற முடிவிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதுதான் இந்த நிமிடம்வரை அவர்கள் எடுத்திருக்கும் உறுதியான முடிவு. இது விஷாலுக்கும் மிக நன்றாகவே தெரியும். பிறகு ஏன் இப்படி செய்தியாளர்களிடம் பேசுகிறார்… அதுதான் விஷால்.
ரிமோட்டில் சேனலை மாற்றும்போது ஏதோ ஒரு சேனலில் விஷால் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பிரகாஷ்ராஜ் கர்நாடக திரைப்படவர்த்தக சபையில் பேசியிருக்கிறார். நாளைக்குள் நல்ல முடிவு தெரியும் என்றெல்லாம் வாய் போனதுபோல் பேசிக்கொண்டே போகிறார். இதில் விசேடம் என்னவென்றால் தான் பேசுவதெல்லாம் கதைக்கு உதவாது என்று அவருக்கே நன்கு தெரியும். ஆனாலும் தமிழப்படவுலகை காப்பற்ற வந்த ரட்சகனாக தன்னைக் காட்டிகொள்ளும் முயற்சிியில் இப்படி பேசுகிறார்.
…….தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தது அதில் பதிமூன்று பேர் இறந்துள்ளார்கள். கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என எனக்கும் தெரியும்…….என்று தன் பத்திரிகை தொடர்பாளராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுவர் மூலம் ப்ரஸ் ரிலீஸ் ஒன்றையும் 31_05_2018 அன்று அனுப்பியிருக்கிறார் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால்.
தூத்துக்குடி கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், அதற்கும் மேலான எண்ணிக்கையில் இறந்து போயிருக்கிறார்கள் என்று விஷால் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பும் செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறாரே… காவல் துறை விஷாலைக் கூப்பிட்டு விசாரணை நடத்த வேண்டாமா… உண்மையில் இறந்ததது எத்தனை பேர் என்று பொது மக்களுக்குத் தெரிய வேண்டாமா?
விஷால் தான் ஏற்றிருக்கும் இரண்டு பெரிய அமைப்புகளுக்குத் தகுதியானவர் என்றால், தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை அனுப்பி கர்நாடக திரையரங்க உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் அல்லவா பேச்சு வார்த்தைக்கு முன்னெடுப்பு செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பெங்களூரில் இருக்கும் பிரகாஷ் ராஜை பேசச் சொல்லியிருகிறேன். கர்நாடக பிலிம் வர்த்தக சபை இன்று கூட்டம் போட்டு நல்ல முடிவைச் சொல்லும்…நாளைக்குள் முடிவு தெரியும் என்றெல்லாம் கதையளந்து கொண்டிருக்கிறார். கேட்பவரெல்லாம் கேனையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றுகூட சொல்வார் போலும்.