வீரத்தின் அடையாளமும், விவேகத்தின் அடையாளமும் கைக்குலுக்கினால்…!

0

 118 total views,  1 views today

நிஜம்தான். தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக, தமிழ் இளைஞர்களிடம் கடந்த ஆண்டு ஏற்பட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ என்ற பெயரிலேயே திரைப்படமாக்கியது – அஹிம்சா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்புக் குழு.
அதேபோல, இன்று விவேகம் என, சொல்லப்படும் அறிவின் அடையாளமாக நிற்கும் பல்கலைக்கழகங்களில் – உலகப் புகழ் பெற்றது ஹார்ட்வேர்ட்! அதில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க தனி இருக்கை அமைக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.
தமிழோடு தொடர்பு என்பதால் மட்டுமின்றி, தமிழின் சிறப்பு, தமிழர்களின் வீரம் உள்ளிட்ட பலவற்றையும் உலக அளவில் பறைசாற்றத் துடிக்கும் இந்த இரண்டு குழுக்களும் இப்போது கைக் கோர்த்துள்ளன.
ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கான தனி இருக்கை அமைவதில் சர்வதேச அளவில் உள்ள பல தமிழ் ஆர்வலர்கள் தீவிரப் பங்காற்றி வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த தமிழ் இருக்கை அமைவதற்கான நிதி திரட்டும் பணியில், அதற்கான பொருளாளர் பொறுப்பு வகிக்கும் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரின் குமார் குமரப்பனை அஹிம்சா புரொடக்ஷன்ஸ் குழு அண்மையில் சந்தித்தது. அதோடு, தமிழ் இருக்கை அமைய முக்கிய பங்காளர்களாக நிதியுதவி அளித்துள்ள விஜய் ஜானகிராமன் மற்றும் சுந்தரேசன் சம்மந்தன் ஆகியோரையும் ‘அஹிம்சா’ குழு சந்தித்தது. இதையொட்டி, ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றைத் திரையிட்டு, அதில் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஹார்வேர்ட்டில் அமைய உள்ள தனி தமிழ் இருக்கைக்கான நிதியாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் இது தொடர்பாக சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த கூட்டத்தில் – அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகும் ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ திரைப்படக் குழுவினர் – இயக்குனர் சந்தோஷ் கோபால், தயாரரிப்பாளர் நிருபமா, இணை தயாரிப்பாளர்கள் ஜெயபால் நடேசன், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, இதற்கான முறையான ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.
சென்னை மெரினா போராட்டம் மட்டுமின்றி, உலகின் பல மூலைகளிலும் அகிம்சை வழியில் நடந்த பல்வேறு போராட்டக் களங்களையும் இந்த படம் காட்சிப்படுத்துவது கவனிக்கத்தக்கது.
இந்த திரைப்படத்தின் முதல் திரை இசை வெளியீடு, அண்மையில்தான் நடந்தது. தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம் போன்றவற்றின் முன்னேறிய நிலைக்கு சாட்சிகள் பலவற்றைச் சுமந்து நின்று தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூலம், அண்மையில் வெளியுலகுக்கு வந்த தளம் – கீழடியில்தான் இந்த முதல் வெளியீடு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் மற்றும் இது தொடர்பான மேலும் பல தகவல்களுக்கு தொடர்பு கொள்ள
சந்தோஷ் (இயக்குனர்) 9840398958
நிருபமா (தயாரிப்பாளர்) 9790468994
Share.

Comments are closed.

CLOSE
CLOSE