400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது அண்ணாதுரை

0

 125 total views,  1 views today

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இரண்டு நாட்களுக்கு முன்பே படத்தை நாங்கள் பார்த்து விட்டோம், சிறப்பாக வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி படம்  முதன்முறையாக 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. படத்தை பற்றிய நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்றார் அலெக்ஸாண்டர்.
இசை வெளியீட்டு விழாவில் ஒரு 1000 பேருக்கு மேல் இருந்த கூட்டத்தில் என்னால் பேசவே முடியவில்லை. பெரிய படம், சின்ன படம் என எல்லா படங்களுக்கும் எல்லோரும் ஒரே மாதிரி கடின உழைப்பை தான் கொடுக்கிறோம்.  இயக்குனர் சேரனின் பொற்காலம் படம் பார்த்து விட்டு தான் இயக்குனராக முடிவெடுத்து வந்தேன். அந்த சேரன் சார் படங்களை போல நானும் படங்களை எடுக்க வேண்டும் என விரும்புகிறேன். படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் பத்திரிக்கையாளர் செந்தில் குமரன் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி என் படத்தில் நடிக்கிறார் என உறுதிப்படுத்தியதே அவர் தான். அவரை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியது எனக்கு பெருமை என்றார் இயக்குனர் சீனிவாசன்.
இளையராஜா இசையமைத்த அஜந்தா படத்துக்கு பாடல் எழுதிய வாலி உள்ளிட்ட 9 கவிஞர்களில் நானும் ஒருவன். இளையராஜா என்னை அழைத்து பாராட்டினார். அண்ணாதுரை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து எனக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள் விஜய் ஆண்டனியும், இயக்குனர் சீனிவாசனும். சரியாக நடிக்காத காட்சியிலும் கூட எனக்கு உற்சாகம்  கொடுத்து ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார்கள். உறவின் மேன்மையை சொல்லும் இந்த படம் எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்றார் நடிகர் செந்தில் குமரன்.
விஜய் ஆண்டனி எனக்கு பல வருட பழக்கம் உள்ளவர். கதையை முதலில் கேட்டது சரத்குமார் தான். அவர் தான் இதில் விஜய் ஆண்டனி நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னார். விஜய் ஆண்டனி உட்பட ஒட்டு மொத்த படக்குழுவும் கடின உழைப்பை கொடுத்துள்ளது. தயாரிப்பாளராக எனக்கு எந்த சுமையையும் கொடுக்காமல் சீனிவாசன் படத்தை முடித்து கொடுத்திருக்கிறார் என்றார் தயாரிப்பாளர் ராதிகா.
ராதிகா மேடம் தயாரிப்பாளராகவும், நான் நடிகராகவும் ஒரு படத்தில் இணைவோம் என நான் எதிர்பார்க்கவேயில்லை. டயானா சம்பிகா தமிழ் பொண்ணு தான், நல்ல நடிகை, அவரே படத்தில் டப்பிங்கும் பேசியிருக்கிறார். அலெக்சாண்டர் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். என் கதாபாத்திரங்களில் எனக்கு என்ன வருமோ அதை நான் பிரதிபலிக்கிறேன். எனக்கு வராத விஷயங்களை நான் முயற்சி செய்வதில்லை. நல்ல சினிமாவுக்கு பாடல்கள் அவசியமே இல்லை. முன்பை போல பாடல்களுக்கு இப்போது வருவாய் வருவதில்லை. அதனால் எங்கள் வெப்சைட்டில் இலவசமாக வழங்கியிருக்கிறோம்.
படத்தில் எனக்கு டபுள் ரோல். அண்ணன் கதாபாத்திரத்துக்கு அண்ணாதுரை, தம்பிக்கு தம்பிதுரை என்றும், தலைப்பு குலசாமி எனவும் வைக்க முடிவு செய்தோம். பின் பிச்சைக்காரன் படத்தில் வரும் அருள் போலவே ரொம்ப சிறந்த கதாபாத்திரம் என்பதாலும், அண்ணாதுரை என்ற தலைப்பை அவமதிப்பு செய்யாததாலும் இந்த தலைப்பையே வைத்தோம். எந்த அரசியல் கட்சியும் இந்த தலைப்புக்கு இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
நாயகி டயானா சம்பிகா, ஒளிப்பதிவாளர் தில்ராஜ், பாடலாசிரியர் அருண் பாரதி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE