அகடு விமர்சனம்

0

 105 total views,  1 views today

இளைஞர்கள் நான்கு பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் காட்டேஜின் மற்றொரு பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த ஒரு டாக்டர் தன் மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருக்கிறார். டாக்டரின் குடும்பத்துடன் இளைஞர்களுக்கு பழக்கம் ஏற்படுகிறது.

குறிப்பாக புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள டாக்டரின் சிறு வயது பெண் கார்த்தி என்ற இளைஞனுடன் நன்கு பழகுகிறாள். திடீரென கார்த்தியும் டாக்டரின் மகளும் காணாமல் போகிறார்கள். மிகுந்த தேடலுக்குப் பிறகு கார்த்தியின் பிணம் காட்டுப் பகுதியில் கிடைக்கிறது.

கார்த்தியை கொன்றது யார்? கொலைகான காரணம் என்ன? காணாமல் போன சிறுமி என்ன ஆனாள் என்ற சஸ்பென்ஸை சிறப்பான திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் குமார்.

கொலை செய்தது யார்? அருவியில் குளிக்கும்போது வீண் சண்டை செய்த சமூக விரோதிகளா…..கடுமையான முகத்துடன் கண்டிப்பு காட்டும் வன அலுவலரா என்றெல்லாம் பார்வையாளர்களை சந்தேகப்பட வைத்து இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.

கொலையை விசாரிக்க வரும் ஜான் விஜய் மட்டுமே படத்தில் தெரிந்த முகம். மற்ற எல்லோரும் புதுமுகங்கள்தான். ஆயினும் புதுமுகங்கள் எல்லோருமே தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நன்கு நடித்திருக்கின்றனர்.

ஜான் விஜய் எப்போதும் கேரட்டைக் கடித்துக்கொண்டே விசாரணை நடத்தும் மேனரிசத்தை ஆரம்பத்தில் ரசித்தாலும், போகப் போக திகட்டிவிடுகிறது.

படத்தில் பாராட்டத்தக்க முதல் அம்சம் சாம்ராட்டின் ஒளிப்பதிவுதான். கொடைக்கானல் மலைமுகடுகளில் தொடங்கி, அடர்ந்த வனப்பகுதிவரை அத்தனை அழகையும் கேமராவில் அடக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பு பல காட்சிகளில் ஜம்ப் ஆவதை எடிட்டர் தியாகு தவிர்த்திருக்கலாம்.

குறைந்த பட்ஜெட்டில் தரமான ஒரு படத்தைத் தந்ததற்காக ஒட்டு மொத்த படக்குழுவையும் தாராளமாகப் பாராட்டலாம்.

சஸ்பென்ஸ் படத்தை விரும்புகிறவர்கள் மட்டுமின்றி, அனைவரும் ஒரு முறை கண்டு ரசிக்கலாம்.

ரேட்டிங் 2.5/ 5

 

Share.

Comments are closed.