சித்திரைச் செவ்வானம் – விமர்சனம்

0

 103 total views,  2 views today

சித்திரைச் செவ்வானம் – விமர்சனம்

சினிமாவில் ஒரு பிரிவில் பிரபலமாக இருப்பவர் இயக்குநராக அறிமுகமாகும்போது, தான் புகழ் பெற காரணமாக இருக்கும் துறைக்கு முக்கியத்துவம் தந்து தன் முதல் படத்தை உருவாக்குவார். உதாரணமாக ஒளிப்பதிவாளர் என்றால் கேமராவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.

ஆனால் ஸ்டண்ட் இயக்குநர் செல்வா இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் சித்திரைச் செவ்வானம் படத்தில் அதிரடி ஆக்ஷன்களுக்கோ சண்டைக்காட்சிகளுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் முத்தாகத் தந்திருக்கிறார் தன் முதல் படத்தை.
கிராமத்து விவசாயி சமுத்திரகனியின் மகளைக் காணவில்லை என்று போலீஸ் வந்து அவரிடம் விசாரிக்கிறது. மகள் குளிக்கும் காட்சி காட்சி சமூக ஊடகங்களில் பரவியதுதான் என அறிந்து அதிர்ச்சியில் உறைகிறார் சமுத்திரகனி.

அந்த வீடியோ மேலும் பரவாமல் தடுக்கவும், எடுத்தவர் யார் என அறியும் முயற்சியிலும் தானே இறங்குகிறார் கனி. அவரது முயற்சிகள் வெற்றி அடைந்ததா… காணாமல் போன மகள் என்ன ஆனாள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் விடை சொல்லியிருக்கும் படம்தான் சித்திரைச் செவ்வானம்.

வழக்கமாக பெரும்பாலான படங்களில் முழம் நீள வசனங்களைப் பேசி அறிவுரைகளை அள்ளி வீசும் சமுத்திரக்கனி, அடக்கி வாசித்து மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்து, மகளை இழந்த சோகத்தில் திணறும் விவசாயியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

உரிய மருத்தவ உதவி கிடைக்காததாலேயே மனைவியே பறிகொடுத்துவிட்டு, தாயை இழந்த தன் மகளை தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்து டாக்டராக்கி ஊருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தையும் உணவுடன் சேர்த்து ஊட்டி வளர்த்தும் பாத்திரத்தில் முத்திரை பதித்து நடித்திருக்கும் சமுத்திரக்கனி என்றென்றும் நினைவில் நிற்பார் .

சமுத்திரக்கனியின் மகளாக அறிமுகமாகியிருக்கிறார் பூஜா கண்ணன். சாய் பல்லவியின் தங்கையான இவர் அக்காவின் பெயரை கொடுக்காமல், பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அழுத்தமான வேடத்தில் அருமையாக நடித்து முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார்.

கடுமையையும், கனிவையும் ஒரு சேரக்காட்டும் காவல் துறை அதிகாரி வேடத்தில் வரும் ரீமா கல்லிங்கல் அந்த பாத்திரத்துக்கு சரியான தேர்வு.

சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையில் வழக்கம்போல் பின்னி எடுத்திருக்கிறார் சாம்.சி.எஸ்.

கிராமத்து பசுமையையும், நகரத்து பரபரப்பையும் திரைக்கு கொண்டு வருவதில் இயக்குனருக்கு துணை நிற்கின்றன மனோஜ் பரமஹம்சா மற்றும் ஆர்.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு.

மகளின் ஹாஸ்டல் அறைத் தோழியையும் தன் மகளைப்போலவே சமுத்திரக்கனி வாடா போடா என அழைப்பதும், அந்தப் பெண்ணும் அப்பா அப்பா என சொல்வதும் அழகான ஹைக்கூ கவிதை என்றால் மிகையாகாது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் காலத்தில் அது குறித்து படமெடுக்க கதையை எழுதிய ஏ.எல்.விஜய், அதை சிறப்பாக படமாக்கிய சில்வா ஆகியோரைப் பாராட்டலாம்.

ரேட்டிங்  4/ 5

Share.

Comments are closed.