முதலில் ஒரு விசயத்துக்காக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரனை பாராட்ட வேண்டும். சமீபத்தில் வெளியான குட் நைட் படத்தைப் போலவே இதுவும் குறட்டை – அதனால் ஏற்படும் பிரச்சினையை சொல்லும் படம் என்றாலும், முற்றிலும் வித்தியாசமாக படத்தை் கொடுத்துள்ளார்.
ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து வரும் அர்ஜுன் (ஜி.வி. பிரகாஷ்) லேசா சத்தம் கேட்டாலும் எழுந்து விடும் பழக்கம் கொண்டவர். குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தீபிகா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தூக்கத்தில் முரட்டுத்தனமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். அதன் காரணமாகவே திருமணம் லேட்டாகி வருகிறது.
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிறது. குறட்டை பிரச்சினையை தீர்க்க, ஆளுக்கு ஒரு நாள் தூங்குவது என முடிவெடுக்கிறார்கள்.
அப்படி ஒருநாள் இரவு முழுதும் கண் விழிக்கிறார் பிரகாஷ் குமார். அதனால் மறுநாள் பேட்டி எடுக்க வேண்டிய நேரத்தில், டிவி அலுவலகத்தின் பாத்ரூமில் தூங்கிவிடுகிறார். இதனால் வேலை பறிபோகிறது. அதோடு பாத்ரூமில் அவர் தூங்கும் படத்தை ஒருவர் செல்போனில் எடுத்து பரப்பிவிட அவமானத்துக்கும் ஆளாகிறார்.ஆகவே மனைவியை டைவர்ஸ் செய்ய கோர்ட்டை அணுகுகிறார். மனைவி ஐஸ்வர்யாவோ பிரிய மறுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு படம் நடிப்பில் முன்னேறி வருகிறார். திருமணத்துக்கு மறுப்பது, மணமானதும் மனைவியின் குறட்டை பிரச்சினையால் தவிப்பது, விவாகரத்து கேட்டு முரண்டுபிடிப்பது என சிறப்பாக நடித்து உள்ளார்.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷூம் அருமையாக நடித்து உள்ளார். குற்ற உணர்ச்சியில் கணவனிடம் மன்றாடும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார்.
அசட்டு அச்சு பிச்சுவாகவே படங்களில் வரும் காளி வெங்கட்டுக்கு கண்டிப்பான அண்ணன் வேடம். ஹிட்லர் என பட்டப்பெயர் வைக்கும் அளவுக்கு அதிகாரத்தை காட்டி இருக்கிறார்.
இளவரசு, நந்தினி, ரோகிணி அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.இயக்குநர் ஆனந்த ரவிச்சந்திரன் ஃபீல் குட் மூவியை கொடுக்கவே முயற்சி செய்துள்ளார். ஆரம்ப காட்சிகளிலேயே ஜி.வி.பிரகாஸ், ஐஸ்வர்யா ராஜேஸ் இருவரது குடும்ப ஆட்கள் எப்படி என்பதை சுருக்கமாக ஆனால் சுவாரஸ்யமாக சொல்லிவிட்டார். ஆகவே படத்துடன் ஒன்றிவிட முடிகிறது.
பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ரசிக்க வைக்கிறார் இசையமைப்பாளராகவும் பொறுப்பேற்று இருக்கும் ஜி.வி.பிரகாஸ். ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்துக்கு பலம்.
மனம் ஒன்றுபட்டுவிட்டால் எந்த பிரச்சினையும் பாதிக்காது என்பதை அழுத்தமாக அதே நேரம் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்.
மதிப்பெண் 3.5/5