கலகத் தலைவன் – விமர்சனம்

0

 38 total views,  1 views today

கலகத் தலைவன் – விமர்சனம்

வித்தியாசமான கதையை கையிலெடுத்து அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் திரைப்படம் எடுப்பதில் விற்பன்னர் மகிழ் திருமேனி. அந்த வகையில் கலகத் தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் துணையோடு தனக்கேயுரிய தனி பாணியில் முத்திரை பதித்து வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்.

கலகத் தலைவன் படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரமான நிஜமுகத்தையும், லாபவெறியில் அவை எந்த அளவுக்கு கீழிறங்கி கொடூர செயல்களைச் செய்யும் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

உதயநிதி பணியாற்றும் வஜ்ரா என்ற நிறுவனம் பல்வேறு தொழில்களிலும் வேரூன்றி, அரசின் ஆதரவுடன் ராட்சத வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில் புதிதாக கனரக வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த வாககனம் எரிபொருள் செலவை பாதியாக குறைக்கும் என்ற அறிவிப்பை வஜ்ரா நிறுவனர் வெளியிட எதிர்பார்ப்பு எகிறுகிறது.

ஆனால் அந்த வாகனம் அரசு அனுமதித்த அளவைவிட அதிக புகையை வெளியேற்றி சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்ற செய்தி வெளியே கசிந்ததால் பங்கு மார்க்கெட்டில் வஜ்ரா நிறவனப் பங்குகள் அதள பாதாளத்துக்குச் செல்கின்றன.

கம்பெனிக்கு மட்டுமே தெரிந்த செய்தியை வெளியே கசியவிட்ட கறுப்பு ஆடு எது என்பதைக் கண்டு பிடிக்க வஜ்ரா நிறுவனர் நியமித்த ஆரவ் களத்தில் இறங்குகிறார்.

ஆரவ் அந்த நபரைக் கண்டுபிடித்தாரா… வஜ்ரா நிறுவனத்தை ஒழித்து கட்டும் முயற்சியில் தகவல்களை கசிய விடப்பட்டது ஏன்… என்பதை சுவைபட விவரிக்கும் படமே கலகத் தலைவன்.

உதயநிதிக்கு என்றே அளவெடுத்து தைத்த ரெடிமேட் சட்டையைப் போன்று அருமையாக பொருந்தும் ஒரு பாத்திரம். அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தும் அவர் ஏற்று நடித்திருக்கும் திரு பாத்திரத்துக்கு கனகச்சிதமாகப் பொருந்திப் போகிறது. உடல் பலத்தை நம்பாமல் மூளையை நம்பி எதிரிகளை எதிர்கொள்ளும் வேடத்தில் மிகை இல்லாத நடிப்பால் நம்மைக் கவர்கிறார் உதயநிதி.

நெஞ்சில் சற்றும் ஈரமே இல்லாமல் கொடூரமான கொலைகளைச் செய்யும் வேடத்தில் ஆரவ் பிரமாதப்படுத்தியிருக்கிறார். கதாநாயகனாக நடித்தபோதுகூட கிடைக்காத மிக வலுவான பாத்திரத்தில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் ஆரவ். தமிழ் சினிமாவுக்கு ஒரு வலுவான கவர்ச்சி வி்ல்லன் கிடைத்திருக்கிறார்.

உதயநிதியின் காதலியாக நாயகி வேடம் ஏற்றிருக்கும் நிதி அகர்வாலைப் பொறுத்தவரை அவர் ஏற்ற வேடத்திற்கு நீதி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அம்மாவின் உயிரைக் காக்க காதலனைக் காட்டிக் கொடுத்துவிட்டு பின்னர் கதறி அழும் காட்சியில் நம் நெஞ்சில் நிறைகிறார் நிதி அகர்வால்.

உதயநிதியுடன் பணியாற்றும் நண்பன் என்று கலையரசனுக்கு சிறிய வேடம் என்றாலும் “ஷாலுவிடம் பாப்பாவை நல்லபடியா வளர்க்கச் சொல்… நீயும் ஜாக்கிரதையாக இரு…”  என்று மரணவாசலில் சொல்லும்போது நம்மை நெகிழ வைக்கிறார்.

நூல் பிடித்தாற்போல் ஒவ்வொரு ஆளாகப் பிடித்து கடைசியில் தான் தேடிய ஆளை நெருங்கும் காட்சிகள் அனைத்தும் ரசமானவை.

ரயில் நிலையத்தில் ஆட்களை தேடும் காட்சியில் நடித்த உதயநிதி, கலையரசன் ஆகியோருடன் போட்டி போட்டுக் கொண்டு ஒளிப்பதிவாளர் தில்ராஜ் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீராந்த் இருவரும் தங்கள் முத்திரையை பதிக்க முயன்றிருக்கிறார்கள். சற்றே நீளமான இந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதமும், படத்தொகுப்பு செய்யப்பட்ட விதமும் அவ்வளவு அருமை.

அரோல் கரோலியின் பாடல்களுக்கான இசையும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான்.

துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்லும் கலகத் தலைவன் படம் அனைத்து தரப்பினரையும் கவரும்.

மதிப்பெண் 3.5/ 5

Share.

Comments are closed.