‘நானும் சிங்கிள்தான்’ விமர்சனம்

0

 58 total views,  1 views today

காதல் என்றாலே காத தூரம் ஓடும் பெண்ணும், எப்படியாவது காதல் திருமணம் செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் இளைஞனும் சந்தித்து பழகினால் முடிவில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை நகைச்சுவையுடன் விவரிக்கும் படம் நானும் சிங்கள்தான்.

நாயகன் அட்டக்கத்தி தினேஷ் டாட்டூ போடும் தொழில் செய்கிறார். அவரது தொழிலுக்கு நண்பர்கள்உதவியாக இருக்கிறார்கள்.
காதல் என்பதையை வெறுக்கும் பெண் நாயகி தீப்தி. தோழி ஒருத்தியை சமூக வலைதளத்தில் அசிங்கப்படுத்திய ஒருவனுக்கு சரியான பாடம் கற்பிக்கும் பெண்ணியவாதிதான் இந்த தீப்தி.

காதலை ஏற்க மறுக்கும் தீப்தியை துரத்தி துரத்தி காதலிக்கிறார் தினேஷ். ஒரு எல்லைக்கு மேல் பொறுக்க முடியாத தீப்தி அலுவலகப் பணிக்காக லண்டன் சென்று விடுகிறார். தன்னை காதலிக்க மறுத்த தீப்தியை விடாமஸ் விரட்டிக் கொண்டு லண்டன் செல்ல முடிவு செய்கிறார் தினேஷ். இதற்காக தன் தந்தை வைத்துக் கொடுத்த டாட்டு ஷாப்பை விற்பனை செய்துவிட்டு நண்பர்களுடன் லண்டன் செல்கிறார்.

லண்டன் எஃப் எம்மில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டே காதலர்களை சேர்த்து வைக்கும் மொட்டை ராஜேந்திரன் தினேஷுக்கு உதவுகிறார்.

லண்டனில் தீப்தியை தேடும் முயற்சியின்போது ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தினைஷுக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றி விட்டு, என் பின்னால் அலையாமல் அவனை அழைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்புங்கள் என நண்பர்களிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார் தீப்தி.

துரத்தித் துரத்தி காதலித்த தீப்தி மனதில் தினேஷ் இடம் பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

காதலை வெறுக்கும் பெண் அந்தப் பெண்ணையே காதலித்து திருமணம் செய்ய நினைக்கும் இளைஞன் என்ற இரண்டு அருமையான பாத்திரங்களை வைத்து நல்லதொரு ரோம்காம் படத்தை தந்திருக்க வேண்டிய அறிமுக இயக்குநர் ஆர்.கோபி என்ன காரணத்தாலோ தன் கதையையும் காட்சி அமைப்புகளையும் நம்பாமல் இரட்டை அர்த்த வசனத்தை நம்பி படம் எடுத்திருக்கிறார். பெண் ரசிகைகளும், குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களையும் பற்றி கவலை இல்லை போலும்.

அதிலும் சில இரட்டை அர்த்த வசனங்களை கேட்கும்போது விசனமாகத்தான் இருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் கே.ஆனந்த ராஜின் ஒளிப்பதிவும், ஹித்தேஷ் மஞ்சுநாத்தின் இசையும்தான். லண்டன் காட்சிகள் நாமே சில நாட்கள் லண்டனில் இருந்து வந்த உணர்வேத் தருகின்றன.

ஹித்தேஷ் மஞ்சுநாத்தின் இசையில் உருவான பாடல்கள் ரசிக்கும் ரகம்தான். பின்னணி இசையிலும் மனிதர் குறை வைக்கவில்லை.

புதுமுகம் தீப்தி அழகாக இருப்பதுடன் அருமையாகவும் நடித்திருக்கிறார். முதல் பாதியில் வரும் பாடல் காட்சியில் நடனத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். தோற்றம், நடிப்பு, நடனம் என அனைத்து தகுதிகளையும் கொண்ட தீப்தி நல்லதொரு நாயகியாக வலம் வர வாய்ப்பு உண்டு

இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் நானும் சிங்கள்தான் இளைஞர்களைக் கவரும் படம்தான்.

 

 

Share.

Comments are closed.

CLOSE
CLOSE